பழ மரங்களில் வேர்முடிச்சு பூக்களை அகற்றினால் கூடுதல் மகசூல்
பழ மரங்களில் வேர்முடிச்சு பூக்களை அகற்றுவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:மா, சப்போட்டா ஆகிய பழ மரக்கன்றுகளை நட்டுள்ளேன். இதன் மூலமாக ஆண்டுதோறும் கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன். நீண்ட காலத்திற்கு பின், வருவாய் தரக்கூடிய செம்மரம், சந்தனம் ஆகிய பல வித மரங்களை சாகுபடி செய்து வருகிறேன்.சப்போட்டா, மா ஆகிய பழ மரங்களில், அறுவடை முடிந்த பின், பழ மரங்களில் ஒட்டு என, அழைக்கப்படும் வேர்முடிச்சுகள் வளரும்.இது போன்ற வேர்முடிச்சுகளை, மரத்தில் இருந்து அகற்ற வேண்டும். அப்போது தான் அடுத்த மகசூலுக்கு, கூடுதல் மகசூல் பெற முடியும். உதாரணமாக, மா மரத்தில் அறுவடை முடிந்த பின், மரத்தில் வரும் வேர்முடிச்சுகளை அகற்ற வேண்டும்.இல்லை எனில், அடுத்த பருவத்திற்கு, பூ எடுக்கும் முன், வேர்முடிச்சுகளில் இருந்து பூ வந்துவிடும். இதில், காய் வந்து, பழமாகும். இதை நாம் சாப்பிட முடியாத அளவிற்கு கசப்பு தன்மையுடன் இருக்கும்.இதுபோன்ற, வேர்முடிச்சுகளை அகற்றினால், மா மரத்திலும் இனிமையான பழங்களை பெறுவதற்கு, வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: கே.வெங்கடபதி,93829 61000.