உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எங்கள் பக்கம் திரும்பாத கேமராக்கள் சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளி

எங்கள் பக்கம் திரும்பாத கேமராக்கள் சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளி

பெங்களூரு: 'எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை, நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை' என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியதால், சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.சட்டசபையில் நேற்று கேள்வி நேரம், பூஜ்ய நேரம் முடிந்த பின், கே.பி.எஸ்.சி., தேர்வில் கன்னட மொழி சரியாக பயன்படுத்தாதது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் அசோக், ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது நடந்த விவாதம்:எதிர்க்கட்சி துணைத் தலைவர் அரவிந்த் பெல்லத்: சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை காண்பிப்பதில்லை. இது சரியில்லை. சட்டசபை அலுவல் கூட்டத்திலும் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான இந்த செயல் சரியில்லை.பா.ஜ., - பசனகவுடா பாட்டீல் எத்னால்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை, நேரடி ஒளிபரப்பின் போது காண்பிக்காமல் இருப்பது சரியில்லை. உடனடியாக இதை சரிசெய்ய வேண்டும்.அரவிந்த் பெல்லத்: சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் பொறுப்பு, இதற்கு முன் மக்கள் தொடர்பு மற்றும் செய்தித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒரு காங்கிரஸ்காரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது.(இந்த வேளையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது)அமைச்சர் பிரியங்க் கார்கே: இவர்கள் ஆட்சிக் காலத்தில், என்ன செய்தார்கள் என்று நினைத்து பார்த்துக் கொள்ளட்டும். இவர்கள் கடைப்பிடித்தது தான், தற்போதும் தொடர்கிறது. நாங்கள் புதிதாக எதுவும் செய்யவில்லை.அரவிந்த் பெல்லத்: சட்டசபை அரங்கில், சில அமைச்சர்கள் தேவையின்றி பேசுகின்றனர். இதை நிறுத்த வேண்டும். சட்டசபை நிகழ்வுகளின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரடி ஒளிபரப்பின்போது, காண்பிக்க வேண்டும்.(இந்த வேளையில், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. யார் என்ன பேசுகின்றனர் என்பதே புரியாத அளவுக்கு மோதல் முற்றியது)சபாநாயகர் காதர்: ஏதாவது தொழில்நுட்பப் பிரச்னை இருக்கிறதா என்று கவனித்து, அனைத்தையும் சரி செய்கிறேன்.(சபாநாயகரின் சமாதானத்தை ஏற்காத பா.ஜ.,வினர், 'எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஓரங்கட்டுவது சரியில்லை' என்று உரத்த குரலில் பேசினர்)பா.ஜ., - சுனில் குமார்: நட்டு, போல்டு எங்கு லுாசாகி உள்ளது என்று பாருங்கள்.காங்., - நாராயணசாமி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நட்டு லுாசாகி விட்டது.(இதனால் ஆக்ரோஷமடைந்த எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினரை பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்)(சபாநாயகர் காதர் எவ்வளவு முயற்சித்தும், இரு தரப்பினரும் சமாதானமாகவில்லை. அனைவரும் அமருங்கள், நான் சரி செய்கிறேன் என்று தொடர்ந்து அறிவுறுத்தியும், இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றஞ்சாட்டி கொண்டே இருந்தனர்)எதிர்க்கட்சி தலைவர் அசோக்: எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஓரங்கட்டுவது சரியில்லை. ஊடகத்தினர் உட்பட அனைவரும் இங்கே உள்ளனர். எங்களுக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், அரசின் செயல் சரியில்லை.காங்., - சிவலிங்கே கவுடா: இதற்கு முன்பு, நீங்கள் என்ன செய்தீர்கள்?(இது எதிர்க்கட்சியினரை மேலும் ஆக்ரோஷமடையச் செய்தது. அமளியில் ஈடுபட்டு, ஆளுங்கட்சியினருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஆளுங்கட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்)அப்போது, எவ்வளவு சமாதானப்படுத்தியும், இரு தரப்பினரும் கேட்காததால் சட்டசபையை சிறிது நேரம் சபாநாயகர் காதர் ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை