பெங்களூரு, : ''பெங்களூரு ஹோட்டல்களில், நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது இதுவரை உறுதி செய்யப்படவில்லை,'' என்று, உணவு துறை கமிஷனர் சீனிவாஸ் விளக்கம் அளித்து உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து, மைசூரு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரயிலின் பார்சல் பெட்டியில் இருந்து, ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட, இறைச்சி பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டன. அப்போது, அங்கு ஆதரவாளர்களுடன் வந்த ஹிந்து அமைப்பின் புனித் கெரேஹள்ளி, இறைச்சி பெட்டிகளில் நாய் இறைச்சி இருப்பதாகவும், அப்துல் ரசாக் என்பவர் நாய் இறைச்சியை ஹோட்டல்களுக்கு விற்பதாகவும் கூறி போராட்டம் நடத்தினார்.இதுபற்றி அறிந்த காட்டன்பேட் போலீசார் அங்கு சென்று, புனித் கெரேஹள்ளி, ஆதரவாளர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது புனித் கெரேஹள்ளி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பணி செய்ய விடாமல் தடுத்ததால், இரவு 11:30 மணிக்கு கைது செய்யப்பட்டார். புகார் குறித்து, அப்துல் ரசாக் கூறியதாவது:கடந்த 12 ஆண்டுகளாக, நாங்கள் இறைச்சி விற்கிறோம். பெங்களூரில் உற்பத்தியாகும் இறைச்சி, போதுமானதாக இல்லை. எனவே வெளி மாநிலங்களில் இருந்து, இறைச்சி வரவழைக்கிறோம். எங்களிடம் சரியான ஆவணங்கள், லைசென்ஸ் உள்ளன. யார் வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளலாம்.இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, ஜெய்ப்பூரில் இருந்து, பெங்களூருக்கு ஆட்டிறைச்சி வரும். இதன்படி, 2,000 கிலோ இறைச்சி வந்தது. உணவுத் துறை வந்து பரிசோதிக்கட்டும். ராஜஸ்தான் ஆடுகளின் வால், நீளமாக இருக்கும். இதை பார்த்து நாய் என்கின்றனர். புனித் கெரேஹள்ளி, பணம் வசூலிக்கும் நோக்கில், இப்படி குற்றம் சாட்டுகிறார். அவர் மீது புகார் அளிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், போலீஸ் காவலில் இருந்த புனித்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நேற்று மாலை புனித் கெரேஹள்ளியை அவரது வக்கீல் சங்கர் சந்தித்து பேசினார்.பின் சங்கர் கூறுகையில், ''விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று, புனித் கெரேஹள்ளியின் காலில் போலீசார் லத்தியால் தாக்கி உள்ளனர். இதனால், அவரால் நடக்க முடியவில்லை. இறைச்சி பெட்டிகளில் நாய் இறைச்சி கடத்தி வந்தது தொடர்பாக, புனித் கெரேஹள்ளியின் பென் டிரைவில் இருந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டு உள்ளன,'' என்றார். உரிமம் ரத்து
இது குறித்து, உணவு துறை கமிஷனர் சீனிவாஸ் நேற்று அளித்த பேட்டி:வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சியை வாங்கி விற்க, பெங்களூரில் 12 பேருக்கு அனுமதி வழங்கி உள்ளோம். ஆனால், அப்துல் ரசாக்கிற்கு இறைச்சி விற்க அனுமதி வழங்கவில்லை. அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்கப்படும்.இறைச்சி வாங்கி விற்கும் 12 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அவர்கள் உரிய பதில் அளிக்கா விட்டால், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். ஜெய்ப்பூரில் இருந்து வந்தது நாய் இறைச்சி போன்று தெரியவில்லை. ஆனாலும் இறைச்சி மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். இதுவரை பெங்களூரு ஹோட்டல் நாய் இறைச்சி கொடுத்ததாக எந்த புகாரும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.