எச்சரிக்கைக்கு பின்னரும் பிளாஸ்டிக் தாளில் இட்லி
பெங்களூரு: சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவின் எச்சரிக்கைக்கு பின்னரும், சில ஹோட்டல்களில் இட்லி வேக வைக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்துவதை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.ஹோட்டல்கள், சாலையோர உணவகங்களில், இட்லி வேக வைக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்துகின்றனர். இது உடல் ஆரோக்கியத்துக்கு கேடானது என, ஆய்வில் தெரிந்தது. இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள் பயன்படுத்த, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தடை விதித்தார்.அமைச்சரின் உத்தரவுபடி, அதிகாரிகள் பெங்களூரின் பல இடங்களில் சோதனை நடத்துகின்றனர். நேற்று முன் தினம் ஹோட்டல்கள், உணவகங்களில் சோதனை நடத்தியபோது, சில இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தெரிந்தது.சில ஹோட்டல்களின் உரிமையாளர்கள், பிளாஸ்டிக் தாள் பயன்படுத்துவதை நிறுத்தினர். வாழை இலை, துணி பயன்படுத்தி இட்லி தயாரிக்கின்றனர். ஆனால் சிலர் இப்போதும் பிளாஸ்டிக் தாள் பயன்படுத்துகின்றனர்.சுகாதார அதிகாரிகள் மெஜஸ்டிக் சுற்றுப்பகுதிகள் உட்பட, பல இடங்களில் சோதனை நடத்தினர். சில ஹோட்டல்களில் பிளாஸ்டிக் தாள் பயன்படுத்துவது தெரிந்தது. அவர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.இத்தகைய ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.