உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜாக்கிகளிடம் ரூ.4 கோடி மோசடி: ராஜஸ்தான் தம்பதி கைது

ஜாக்கிகளிடம் ரூ.4 கோடி மோசடி: ராஜஸ்தான் தம்பதி கைது

பெங்களூரு: வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, குதிரை ஜாக்கிகளிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்த, ராஜஸ்தான் தம்பதி கைது செய்யப்பட்டு உள்ளனர்.பெங்களூரு தென்கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், கடந்த மாதம் 24ம் தேதி அஸ்ரப் என்பவர் அளித்த புகாரில், 'வெளிநாடுகளில் குதிரை ஜாக்கி வேலை வாங்கி தருவதாக கூறி, திலக்நகரை சேர்ந்த சக்லைன் சுல்தான், 33, அவரது மனைவி நிகாத் சுல்தான், 28 ஆகியோர் என்னிடம் 8 லட்சம் ரூபாய் வாங்கினர்.'துபாய் செல்ல பாஸ்போர்ட், விசாவும் வாங்கி கொடுத்தனர். ஆனால் இரண்டும் போலியானது என்று தெரிந்தது. தம்பதியிடம் நான் கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார். அந்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இந்நிலையில், மேலும் சில குதிரை ஜாக்கிகள் தங்களிடமும், தம்பதி பண மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்தனர். தலைமறைவாக இருந்த தம்பதியை பிடிக்க, போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

ராஜஸ்தானில் கைது

கடந்த 19ம் தேதி தம்பதியை அவர்களின் சொந்த ஊரான, ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 66 லட்சம் ரூபாய் ரொக்கம், இரண்டு கார், மூன்று பைக், 24 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்த மதிப்பு 80 லட்சம் ரூபாய் ஆகும்.சக்லைன் சுல்தான் பெங்களூரு ரேஸ் கோர்சில், சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்தார். அப்போது அவருக்கும், வெளிநாட்டை சேர்ந்த குதிரை ஜாக்கி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 'வெளிநாடுகளில் குதிரை ஜாக்கி வேலைக்கு நிறைய பேர் தேவைப்படுகின்றனர். உனக்கு யாரையாவது தெரிந்தால் அனுப்பி விடு. அதற்குரிய கமிஷன் பணத்தை தருகிறேன்' என்று, வெளிநாட்டு குதிரை ஜாக்கி கூறி உள்ளார்.இதையடுத்து தனக்கு தெரிந்த மூன்று பேரை, வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து அதற்கு கமிஷன் பணத்தையும், சக்லைன் சுல்தான் வாங்கி உள்ளார். இந்த தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதை அறிந்த அவர், மோசடியில் ஈடுபட நினைத்தார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்து உள்ளார். சமூக வலைதளங்களில் வெளிநாடுகளில் குதிரை ஜாக்கி வேலைக்கு அனுப்பி வைக்க, தங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று தம்பதி விளம்பரம் செய்து இருந்தனர்.

50 பேரிடம் மோசடி

அந்த விளம்பரத்தை பார்த்து, வேலைக்கு செல்ல பேசுபவர்களிடம் இருந்து 8 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர். பின், போலி பாஸ்போர்ட், விசா கொடுத்து ஏமாற்றி உள்ளனர். இதுவரை 50 பேரிடம் இருந்து தலா 8 லட்சம் ரூபாய் என, 4 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றியதும் தெரியவந்து உள்ளது.மோசடி செய்த பணத்தில் இலங்கை, கோவா, ஊட்டி, துபாய்க்கு சுற்றுலா சென்று, ஆடம்பரமாக செலவு செய்ததும் தெரிந்தது. இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை