கோலாரில் 3 ஆண்டுகளில் விபத்தில் 1,272 பேர் பலி
கோலார்: கோலார் மாவட்டத்தில், 2023 முதல் 2025 வரையிலான கால கட்டத்தில் நடந்த 4,173 சாலை விபத்துகளில், 1,272 பேர் பலியாகியுள்ளனர். கோலாரில் நேற்று நடந்த சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி பேசியதாவது: கோலார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 2023 முதல், 2025 வரை மாவட்டத்தில் 4,173 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,272 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து இடங்களில் தேசிய நெடுஞ்சாலை-, 75 ஆபத்தான சாலையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் நரசாப்பூர் தொழில்துறை பகுதியில் மேம்பாலம், ஜனவரிக்குள் முல்பாகலின் நங்கிலி கிராஸ் பகுதியில் சாலை பணிகளையும், பிப்ரவரிக்குள் வடகுரு, தம்பரஹள்ளி, நரசிம்ம தீர்த்தம், வடகல்லி ஆகிய இடங்களில் நடைபெறும் பணிகளையும் முடிக்க வேண்டும். பெங்களூரு -- சென்னை விரைவு சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. லாரிகள், கனரக வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் இயக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை தேவை. விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் . பள்ளி மாணவர்கள், ஆட்டோ, லாரி ஓட்டுனர்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.