உரக்குழியில் விழுந்து 2 வயது குழந்தை பலி
உத்தர கன்னடா: கார்வாரில் மாட்டுத் தொழுவத்தில் உள்ள உரக்குழியில் விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரின் டோங்ரி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஹலவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ஹெப்பார். இவரது 2 வயது பெண் குழந்தை சாத்வி. நேற்று காலை மாட்டுத் தொழுவத்தில் ஸ்ரீகாந்த் பணியாற்றிக் கொண்டிருந்தார். பணிக்கு வரும்போது, குழந்தையையும் ஸ்ரீகாந்த் துாக்கி வந்திருந்தார்.குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததால், தன் வேலையில் ஸ்ரீகாந்த் மும்முரமாக இருந்தார். சிறிது நேரத்தில் மகளின் சத்தம் இல்லாததால், தேடினார். கிடைக்கவில்லை. அப்போது தான் தொழுவத்தில் அருகில் உள்ள உரக்குழியை கவனித்தார். அங்கு மகள் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தொடர் மழையால், திறந்திருந்த உரக்குழியில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதை அறியாத குழந்தை, இதில் விழுந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அங்கோலா போலீசார் விசாரிக்கின்றனர்.