உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு பள்ளிகளில் படித்த 37,000 மாணவியருக்கு... ஜாக்பாட்!: கல்லுாரி படிப்புக்கு 30,000 ரூபாய் உதவித்தொகை

அரசு பள்ளிகளில் படித்த 37,000 மாணவியருக்கு... ஜாக்பாட்!: கல்லுாரி படிப்புக்கு 30,000 ரூபாய் உதவித்தொகை

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் படித்து கல்லுாரியில் சேரும் மாணவியருக்கு, 'ஜாக்பாட்' அடிக்கப் போகிறது. இவர்களுக்கு ஆண்டுதோறும் 30,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'தீபிகா மாணவியர் உதவித்தொகை' திட்டத்தை விரைவில் அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 37,000 மாணவியர் பயனடையப் போகின்றனர். கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியரில் சிலர், பள்ளி படிப்பை முடித்தவுடன், கல்லுாரியில் சேராமல் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். இதற்கு வீட்டின் பொருளாதார சூழலே காரணமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு உயர் கல்வி படிப்பதை ஊக்கப்படுத்துவதற்காக, மாணவியருக்கு பல உதவித்தொகை திட்டங்களை, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக, 'வித்யாஸ்ரீ' உதவித்தொகை, 'சஞ்சே ஹொன்னம்மா' உதவித்தொகை போன்ற திட்டங்களை கூறலாம். திட்டம் இருப்பினும், பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லுாரியில் மாணவியர் சேருவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு 'தீபிகா மாணவியர் உதவித்தொகை' திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத் தப்படுகிறது. இது முழுக்க முழுக்க பெண்களின் கல்லுாரி படிப்பை முன்னிலைப்படுத்தும் திட்டமாகும். இதன் மூலம் தனியார், அரசு கல்லுாரியில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிக்கும் மாணவியருக்கு ஆண்டுதோறும் 30,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டு முதலே அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இந்த கல்வி ஆண்டில் இத்திட்டத்தின் மூலம் 37,000 மாணவியர் பயனடைவர். கட்டாயம் இதில் பயனடைய விரும்பும் மாணவியர், 10ம் வகுப்பு, பி.யு., இரண்டாம் ஆண்டு ஆகியவற்றை அரசு பள்ளிகளில் மட்டுமே படித்திருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கல்வியாண்டிலும் தவறாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இதனால், அரசு பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை அதிகமாகும். இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறிய தாவது: பெண்கள் உயர் கல்வி பெறும் எண்ணிக்கையை அதிகரிப்பதே, இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். மாணவியரின் கல்லுாரி படிப்புக்கு பணம் தடையாக இருப்பது நீக்கப்பட வேண்டும். பெண்கள் பட்டம் பெறும் போது, அவர்கள் சமுதாயத்தில் சமூக நீதியை நிலை நாட்டுவர். சில பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் உயர் கல்விக்கு செலவு செய்வதற்கு தயங்குகின்றனர். இந்த உதவித்தொகை மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கிலான மாணவியருக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இதனால், அரசு பள்ளி மாணவியர் பெரிதும் பயனடைவர். இவ்வாறு அவர் கூறினார். அவகாசம் உயர் கல்வித் துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் கூறுகையில், ''அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் தலைவரும், விப்ரோ நிறுவனத்தின் நிறுவனருமான அசிம் பிரேம்ஜி இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். அவர் தன் வருமானத்தில் 50 சதவீதத்தை கல்வி, சமூக சேவைக்காக செலவிடுகிறார். ''இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை கிடைக்க, மாணவியர் தங்கள் சுய விபரங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார். நல்ல கல்வி பெற வேண்டும்! அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதே என் கனவு. தற்போது, பெண் குழந்தைகள் பலரும் பள்ளிக்கு செல்வதை பார்க்கிறேன். அவர்கள் பலரும் கல்லுாரிக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுவதாக என்னிடம் கூறினர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. எனவே, கல்லுாரிக்கு செல்ல விரும்பும் மாணவியருக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்தேன். அசிம் பிரேம்ஜி, நிறுவனர், 'விப்ரோ'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !