| ADDED : நவ 18, 2025 04:55 AM
கொப்பால்: கடன் கேட்ட பெண்ணை வரவழைத்து, பணம் தருவதாக கூறி கூட்டு பலாத்காரம் செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொப்பால் மாவட்டம் ஹொஸ்பேட்டை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் லட்சுமண் என்பவர் அறிமுகமானார். இது நட்பாக மாறியது. தன் குடும்பத்தின் நிலை குறித்து லட்சுமணிடம் கூறிய அப்பெண், 5,000 ரூபாய் கடன் கேட்டார். அவரும், நேற்று முன்தினம் அப்பெண்ணுக்கு போன் செய்து, 'நீ கேட்ட பணம் என்னிடம் உள்ளது. வாங்கி செல்' என்று கூறியுள்ளார். தனது கணவரிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு, பணத்தை வாங் க ஹொஸ்பேட்டில் இருந்து எலபுர்காவுக்கு பஸ்சில் சென்றார். லட்சுமண் கூறிய இடத்தில் அவரை சந்தித்தார். அவரை இருசக்கர வாகனத்தில் பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே லட்சுமணின் நண்பர்கள் பசவராஜ், சிவகுமார், பீமப்பா காத்திருந்தனர். அப்பெண்ணுக்கு, 'ஜூஸ்' கொடுத்தனர். அதை குடித்த அவர், மயக்கம் அடைந்தார். அவரை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பியோடினர். மயக்கம் தெளிந்த அவர், தட்டுத்தடுமாறி வெளியே வந்தார். அவ்வழியாக வந்த போக்குவரத்து போலீசை நிறுத்தி, நடந்த விபரத்தை கூறினார். அவரும், அப்பெண்ணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த எலபுர்கா போலீசார், கதக் மாவட்டம் ரோனாவின் அசுதி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன், பசவராஜ், ஹனுமாபூர் கிராமத்தை சேர்ந்த பீமப்பா, சசிகுமார் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.