5 புலிகள் கொலை 3 அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு 3 அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு
பெங்களூரு: ஐந்து புலிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று வனத்துறை அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாம்ராஜ்நகர், ஹனுார் தாலுகாவில் உள்ள மலை மஹாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில் ஐந்து புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இதில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மீனாட்சி நேகி, நேற்று வெளியிட்ட அறிவிப்பு:சாலையிலிருந்து 800 மீட்டர் துாரத்தில், புலிகள் இறந்து கிடந்தும் அதிகாரிகள் யாரும் கவனிக்கவில்லை.இதற்கு மலை மஹாதேஸ்வரா வனவிலங்கு சரணாலய துணை வனப்பாதுகாவலர் சக்ரபாணி, உதவி வனப்பாதுகாவலர் கஜ்னானா ஹெக்டே, வனச்சரக அலுவலர் மாதேஷ் ஆகியோரே பொறுப்பு. இவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பு அளிக்கப்படுகிறது.பெங்களூருக்கு மாற்றப்பட்ட ஐ.எப்.எஸ்., அதிகாரி சந்தோஷ் குமார், தற்காலிகமாக எம்.எம்., மலைப்பகுதியையும் கண்காணிப்பார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.