ஓட்டு மோசடிக்கு 75 மொபைல் எண்
கலபுரகி: ஆலந்த் தொகுதி ஓட்டு மோசடி வழக்கில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஓட்டுகளை நீக்க, 75 மொபைல் போன் எண்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கலபுரகி, ஆலந்த் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலின் போது 6,000க்கும் மேற்பட்ட ஓட்டுகளை நீக்க முயற்சி நடந்ததாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி இருந்தார். இது குறித்து விசாரிக்க, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இவர்களது விசாரணையில், பல திடுக்கி டும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பின. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து, 6,000க்கும் மேற்பட்டோரின் ஓட்டுகளை நீக்க சட்டவிரோதமாக, 75 மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த மொபைல் எண்கள் மூலம் ஓ.டி.பி., எனும் ஒரு முறை கடவுசொல்லை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இருந்து ஓட்டுகளை நீக்க முயற்சி நடந்தது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் கலபுரகியை சேர்ந்த அக்ரம், அஷ்பக், முஸ்தாக், நதீம் ஈடுபட்டு உள்ளனர். ஒரு ஓட்டை நீக்க, 80 ரூபாய் பணம் பெறப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.