தோழியுடன் கள்ளக்காதலன் நெருக்கம் கள்ளக்காதலி துாக்கிட்டு தற்கொலை
அக்ரஹாரா தாசரஹள்ளி: 'ஓயோ' லாட்ஜில் தன் தோழியுடன், கள்ளக்காதலன் நெருக்கமாக இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்த கள்ளக்காதலி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு, காமாட்சிபாளையாவை சேர்ந்தவர் விஸ்வநாத், 40. தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை செய்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். விஸ்வநாத்திற்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான யசோதா, 38, என்பவருக்கும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர். தங்களது உறவு பற்றி இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது தோழியான அனுஸ்ரீயை, விஸ்வநாத்திற்கு யசோதா அறிமுகம் செய்து வைத்தார். அனுஸ்ரீயும், விஸ்வநாத்தும் அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டனர். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. 'ஓயோ' லாட்ஜில் அறை எடுத்து உல்லாசமாக இருந்தனர். இதுபற்றி சமீபத்தில் யசோதாவுக்கு தெரிந்தது. இருவரிடமும் அவர் தகராறு செய்தார். கள்ளக்காதலை கைவிடும்படி சண்டை போட்டார். இருவரும் கேட்கவில்லை. நேற்று முன்தினம் மதியம் விஸ்வநாத்தும், அனுஸ்ரீயும், அக்ரஹாரா தாசரஹள்ளியில் உள்ள ஓயோ லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர். இதுபற்றி அறிந்த யசோதாவும், அந்த லாட்ஜிற்கு சென்று அறை எடுத்துத் தங்கினார். விஸ்வநாத்தும், அனுஸ்ரீயும் தங்கி இருந்த அறைக்கு இரவில் சென்றார். இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து, தகராறு செய்தார். அனுஸ்ரீ உடனான கள்ளக்காதலை கைவிடும்படி விஸ்வநாத்திடம் யசோதா கெஞ்சி உள்ளார். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மனம் உடைந்த யசோதா, தான் தங்கியிருந்த அறைக்கு சென்று, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். யசோதா குடும்பத்தினர் புகார் அளித்ததை அடுத்து, விஸ்வநாத் மீது மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது.