சகோதரியுடன் நடிகர் தகராறு பரவும் வீடியோவால் பரபரப்பு
அம்ருதஹள்ளி, : வீடு யாருக்கு சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில், சின்னத்திரை நடிகர் ரஞ்சித்தின் மனைவியும், சகோதரியும் சண்டை போடும் வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று பரவியது. கன்னடத்தில் வெளியான ஷானி, அவனு மாதரே ஸ்ரவாணி சீரியல்களில் நடித்தவர் ரஞ்சித். கன்னட பிக்பாஸ் 11வது சீசன் போட்டியாளராகவும் இருந்தார். ரஞ்சித், மனைவி மானசா, மகளுடன் அம்ருதஹள்ளியில் மூன்று மாடி வீட்டில், மூன்றாவது மாடியில் வசிக்கிறார். முதல் மாடியில் ரஞ்சித்தின் அக்கா ரஷ்மி, அவரது கணவர் ஜெகதீஷுடன் வசிக்கிறார். இந்நிலையில் ரஞ்சித் மனைவி மானசாவும், ரஷ்மியும் சண்டையிடுவதும்; ரஷ்மியை, ரஞ்சித் தாக்க முயன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. இதுகுறித்து ரஞ்சித் கூறியதாவது: கடந்த 2018ல் ஷானி சீரியலில் நடித்த போது, இந்த வீட்டை வாங்கினேன். அக்கா ரஷ்மி பெயரில் பதிவு செய்தேன். அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை. அக்கா, அவரது கணவர் ஜெகதீஷ் முதல் மாடியில் வசித்தனர். நான் மூன்றாவது மாடியில் வசித்தேன். எனக்கு திருமணம் ஆன பின், வீட்டிற்காக பிரச்னை துவங்கியது. வீட்டை எனது அக்கா சொந்தம் கொண்டாடுகிறார். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை, அவருக்கு ஏன் கொடுக்க வேண்டும். ரேஷன் பொருட்களை எங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து, ரஷ்மி வீசியதால் தகராறு ஏற்பட்டது. வீடு பிரச்னையை சிவில் நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ரஷ்மியை நான் தாக்கியதாக அவரது கணவர் போலீசில் புகார் செய்து உள்ளார். இப்போது நாங்கள் வீட்டிற்கு சண்டையிடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ பரவினால், எனது பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கின்றனர். எங்களுக்குள் உள்ள பிரச்னையை உறவினர்கள், நண்பர்கள் தீர்க்க முயன்றனர். ரஷ்மி உடன்படவில்லை. எல்லாவற்றையும் சட்டப்படி பார்த்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.