உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹாசன் கலெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் சான்றிதழை தாமதமாக வழங்கியதால் அதிரடி

ஹாசன் கலெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் சான்றிதழை தாமதமாக வழங்கியதால் அதிரடி

பெங்களூரு: ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் வழங்க தாமப்படுத்திய மாவட்ட ஜாதி, வருவாய் சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டி தலைவராக உள்ள ஹாசன் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.கர்நாடக வழக்கு விசாரணை இயக்குநரகத்தில், 181 உதவி அரசு வக்கீல்கள் பணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஹாசன் மாவட்டத்தின் சன்னராயபட்டணாவை சேர்ந்த வக்கீல் முத்துலட்சுமி, '3 ஏ' (ஓ.பி.சி.,) பிரிவின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.கடந்த 2023 ஜனவரி 17ல் வெளியான பட்டியலில், முத்துலட்சுமிக்கு அரசு உதவி வக்கீல் பணி கிடைத்தது. அதன்பின், தாலுகா ஜாதி, வருவாய் சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டிக்கு, ஆன்லைன் மூலம் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, சான்றிதழ்கள் வழங்குமாறு கோரியிருந்தார்.இதை பரிசீலித்த கமிட்டி, முத்துலட்சுமியின் வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரியை அனுப்பியது. அந்த அதிகாரியும், முத்துலட்சுமி வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்தி, 'முத்துலட்சுமியின் கணவர், தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அத்துடன், அவரது வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, முத்துலட்சுமியின் ஜாதி, வருவாய் சான்றிதழை ஏற்க கமிட்டி மறுத்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த முத்துலட்சுமி, 'சட்டப்படி, வருமான சான்றிதழில் பெற்றோரின் வருமானத்தை தான் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். கணவரின் வருமானத்தை ஏற்க முடியாது. சட்டத்தில் இதற்கு இடம் உள்ளது.'எனவே, என் தந்தையின் வருமானத்தை கருத்தில் கொண்டு, அதற்கான வருமான சான்றிதழ் வழங்க வேண்டும்' என்று கூறியும், கமிட்டி அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டனர்.இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், முத்துலட்சுமி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்தபோது, முத்துலட்சுமிக்கு ஜாதி, வருவாய் சான்றிதழை கமிட்டி வழங்கியது. இம்மனு மீது, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அவர், நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவு:உதவி சிறப்பு வக்கீல் பதவிக்கு விண்ணப்பித்த மற்றவர்கள் பணியில் சேர்ந்தனர். மனுதாரர் முத்துலட்சுமிக்கு வேலை கிடைத்தும், சான்றிதழ் ஒப்புதல் கிடைக்காமல், 12 மாதங்கள் மன உளைச்சலுக்கு ஆளானார். 2024ல் உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னரே, அவருக்கு மாநில அரசு சான்றிதழ்களை வழங்கியது.சட்டங்களை பின்பற்றாத அதிகாரிகள், அது பற்றிய விழிப்புணர்வு இல்லாதது சட்டத்தை அவமதிப்பதாகும். இதுபோன்ற நடவடிக்கையை மன்னிக்க முடியாது. அறியாமையில் மூழ்கியிருக்கும் அதிகாரியின் அலட்சியத்தை, நீதிமன்றத்தில் நியாயப்படுத்த முடியாது.மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, மாவட்ட ஜாதி, வருமான சான்றிதழ் சரிபார்ப்பு குழு தலைவராக உள்ள மாவட்ட கலெக்டர், உறுப்பினராக உள்ள சன்னராயபட்டணா தாசில்தார், செயலராக உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இணை இயக்குநர், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக துணை செயலர் ஆகியோர் முத்துலட்சுமிக்கு 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இந்த பணத்தை அரசின் நிதியில் இருந்து வழங்கக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்கள் சொந்த பணத்தில் வழங்க வேண்டும். மற்ற அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக அபராதம் விதிக்கப்படுகிறது.இத்தொகையை, உத்தரவு பிறப்பித்த நான்கு வார காலத்துக்குள் வழங்க வேண்டும். அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கை, மன்னிக்க முடியாததாகும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை