உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அன்னபாக்யா திட்ட அரிசிக்கான தொகை நிறுத்தம்? : 4 மாதமாக வராததால் பயனாளிகள் சந்தேகம்

அன்னபாக்யா திட்ட அரிசிக்கான தொகை நிறுத்தம்? : 4 மாதமாக வராததால் பயனாளிகள் சந்தேகம்

பெங்களூரு: 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ், அரிசிக்கு பதிலாக வழங்கப்படும் பணம், நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரிசிக்கான நிதி நிரந்தரமாக நிறுத்தப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் ஐந்து வாக்குறுதி திட்டங்களை அறிவித்திருந்தது. பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின், ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்களை செயல்படுத்தியது. ஐந்து திட்டங்களில், 'அன்னபாக்யா' திட்டமும் ஒன்றாகும்.வறுமை கோடுவறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பி.பி.எல்., குடும்பங்களுக்கு, மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் இதுவாகும். பயனாளிகளுக்கு 10 கிலோ அரிசி வழங்க, அரசு தயாராக இருந்தது. ஆனால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டது. அசாம், சண்டிகர் உட்பட சில மாநிலங்களில் அரிசி வாங்க முயற்சித்தது.அந்த மாநிலங்களிலும் மழையால் சாகுபடி பாதிக்கப்பட்டதால், அரிசி பற்றாக்குறை இருந்தது. அரிசி கிடைக்கவில்லை. எனவே ஐந்து கிலோ அரிசியும், ஐந்து கிலோ அரிசிக்கு தலா 34 ரூபாய் வீதம், 170 ரூபாய் பயனாளிகள் கணக்கில் செலுத்தப்பட்டது.இந்த தொகை போதாது என, எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. 'கிலோ அரிசி விலை 60 முதல் 65 ரூபாய் வரை உள்ளது. அரசு வெறும் 34 ரூபாய் வழங்குகிறது. முடிந்தால் 10 கிலோ அரிசி தாருங்கள். இல்லை என்றால் அரிசிக்கான தொகையை உயர்த்துங்கள்' என, அரசை வலியுறுத்தின. பயனாளிகளும் கூடுதல் தொகை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.அரிசி தொகையை அரசு உயர்த்தவில்லை. இதற்கிடையே, இந்த 170 ரூபாயும் சரியாக செலுத்தப்படவில்லை. 2024 அக்டோபரில் இருந்து, அரிசிக்கான தொகை வரவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிரஹலட்சுமிஇதற்கிடையே பல்வேறு பகுதிகளில், 'கிரஹலட்சுமி' திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் 2,000 ரூபாயும் சரியாக கிடைப்பதில்லை என, தகவல் வெளியாகியுள்ளது. வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த, மாநில அரசுக்கு 57,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. இதை சமாளிக்க முடியாமல் அரசு திணறுகிறது. திட்டங்களுக்கு நிதி திரட்ட மாற்று வழிகளை தேடுகிறது.வாக்குறுதி திட்டங்களால், தொகுதி வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்கவில்லை என, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே கடுப்பில் உள்ளனர். இதையே காரணம் காட்டி, ஆளந்தா எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல், முதல்வரின் அரசியல் ஆலோசகர் பதவியை சில நாட்களுக்கு முன், ராஜினாமா செய்தார். வாக்குறுதி திட்டங்களை நிறுத்தும்படி முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.பொருளாதார நெருக்கடி காரணமாக, வாக்குறுதி திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும் என, பா.ஜ., தலைவர்கள் அவ்வப்போது கூறுகின்றனர். அன்னபாக்யா அரிசி பணமும், நான்கு மாதங்களாக வரவில்லை.கிரஹலட்சுமி உதவித்தொகையும் சரியாக வருவது இல்லை. இதை பார்க்கும் போது, திட்டங்கள் படிப்படியாக நிறுத்தப்படுமோ என, பயனாளிகள் சந்தேகிக்கின்றனர். மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:அன்னபாக்யா திட்டத்துக்கு, அரிசி பற்றாக்குறை என, மாநில அரசு கூறி வருகிறது. இத்திட்டத்துக்காக கர்நாடக அரசுக்கு கிலோ 22.50 ரூபாய் வீதம் அரிசி வினியோகிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த அரிசியை வாங்கினால், பயனாளிகளுக்கு பணத்துக்கு பதிலாக அரிசி வழங்க, மாநில அரசுக்கு உதவியாக இருக்கும்.ஆண்டு தோறும் மாநில அரசுக்கு, 2,280 கோடி ரூபாய் மிச்சமாகும். கூடுதல் அரிசி வினியோகிக்கும்படி, மாநில உணவுத்துறை அமைச்சர் முனியப்பா, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு முன் வறட்சியால், அரிசி பற்றாக்குறை இருந்தது. மத்திய அரசால் அரிசி வழங்க முடியவில்லை. இப்போது போதுமான அரிசி சேகரிப்பில் உள்ளது. அரிசி வினியோகிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மாநில அரசின் கருவூலம் காலியாகி விட்டது. எனவே வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. பணம் இல்லாததால், அன்னபாக்யா, கிரஹலட்சுமி திட்டத்தின் நிதியை, பயனாளிகளின் கணக்கில் செலுத்த முடியவில்லை. மாநில மக்களுக்கு, காங்கிரஸ் அரசின் உண்மையான முகம் தெரிந்துள்ளது.- ராஜசேகர், பா.ஜ., தலைவர், தாவணகெரே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி