வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசாங்கம் நினைத்தால் எவ்வளவோ வசதிகளை செய்து தந்து விட முடியும். மக்களும் நல்லது கெட்டதை சீர்தூக்கி பார்த்து ஓட்டு போட முன்வர வேண்டும்.
பெங்களூரு: பெங்களூரில் கோடைகாலத்தில், கைக்கெட்டும் கட்டணத்தில் மக்களுக்கு டேங்கர் மூலம், குடிநீர் வழங்குவதுடன், 'டேங்கர் மாபியா'வுக்கு கடிவாளம் போட குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக காவிரி இணைப்பு மையம் திறக்க தயாராகிறது.இதுதொடர்பாக, குடிநீர் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:கோடைகாலம் துவங்கினால், பெங்களூரில் தண்ணீர் 'டேங்கர் மாபியா'வினர் சுறுசுறுப்படைவர். மனம்போனபடி கட்டணம் நிர்ணயித்து, மக்களிடம் கொள்ளையடிப்பர்.மாநில அரசும், அதிகாரிகள் எவ்வளவோ முயற்சித்தும், இதை தடுக்க முடியவில்லை. மக்களின் தேவையை முதலீடாக்கி, பணம் சம்பாதிக்க முற்படுவர். திட்டம்
இம்முறை கோடைகாலத்தில், 'டேங்கர் மாபியா'வை கட்டுப்படுத்த குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.காவிரி குடிநீர் இணைப்பு பெறும்படி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. அது மட்டுமின்றி, 'காவிரி இணைப்பு மையம்' திறக்க முடிவு செய்துள்ளது.கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில், தற்காலிக தண்ணீர் சேகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.இங்கிருந்து தேவையான இடங்களில் மக்களுக்கு, கைக்கெட்டும் கட்டணத்தில் குடிநீர் வினியோகிப்பது, காவிரி இணைப்பு மையத்தின் பணியாகும்.இதுவரை பெங்களூரு குடிநீர் வாரியம், தனியார் டேங்கர் உரிமையாளர்களுக்கு காவிரி நீர் வினியோகித்தது இல்லை. தற்போது குடிநீர் வாரியத்தில், கூடுதல் நீர் இருப்புள்ளதால் அந்த நீர் நல்ல முறையில் பயன்படுத்தப்படும்.தனியார் டேங்கர்கள் உதவியுடன் காவிரி நீர் வினியோகிக்கப்படும். இதனால் 'டேங்கர் மாபியா'வினரை கட்டுப்படுத்தலாம்.காவிரி நீர் தேவைப்படுவோர், காவிரி இணைப்பு மையத்துக்கு வந்து, குடிநீர் வாரியம் நிர்ணயித்த கட்டணம் செலுத்தி, குடிநீர் பெறலாம். தண்ணீர் கொண்டு வரும் டேங்கருக்கான வாடகை தொகையை, அவர்களே செலுத்த வேண்டும்.இதுவரை டேங்கர் உரிமையாளர்கள், எங்கிருந்து தண்ணீர் கொண்டு வந்தாலும், கேள்வி எழுப்பாமல் மக்கள் பெற்றுக் கொள்வர்.டேங்கர் உரிமையாளர்கள் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்த வேண்டி இருந்தது. தண்ணீர் சுத்தமானது என்பதற்கு உத்தரவாதமும் இல்லை. இந்த தண்ணீரை பயன்படுத்தி மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது.ஆனால் காவிரி நீர் துாய்மையானது. மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 110 கிராமங்கள் உட்பட, பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், காவிரி நீர் இணைப்பு பெறாமல், டேங்கர் நீரையே நம்பியுள்ளனர்.இவர்கள் உடனடியாக காவிரி நீர் இணைப்பு பெற வேண்டும். இணைப்பு பெற முடியாதவர்கள், காவிரி இணைப்பு மையத்துக்கு வந்து, டேங்கர் மூலமாக குடிநீர் பெறலாம். பயன்பாடு
கோடைகாலத்தில் பெங்களூரின் புறநகர் பகுதிகளில் ஆழ்துளைக்கிணறுகளில் இருந்து அதிகமான தண்ணீர் பயன்படுத்தப்படும். காவிரி இணைப்பு மையம் திறப்பதால், ஆழ்துளைக்கிணற்று நீர் பயன்பாடு குறையும்.டேங்கர் உரிமையாளர்கள் ஆழ்துளைக்கிணறுகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் எடுத்து விற்பதால், அவை வறண்டுவிடுகின்றன.காவிரி நீர் பயன்படுத்துவதால், இந்த பிரச்னையும் குறையும். முதற்கட்டமாக 10 இடங்களில், காவிரி இணைப்பு மையம் திறக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசாங்கம் நினைத்தால் எவ்வளவோ வசதிகளை செய்து தந்து விட முடியும். மக்களும் நல்லது கெட்டதை சீர்தூக்கி பார்த்து ஓட்டு போட முன்வர வேண்டும்.