உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிவகுமாரை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி பசனகவுடா பாட்டீல் எத்னால் திடுக்

 சிவகுமாரை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி பசனகவுடா பாட்டீல் எத்னால் திடுக்

பெலகாவி: ''என்னை கட்சியில் இருந்து நீக்கிய போது, துணை முதல்வர் சிவகுமாரை பா.ஜ.,வுக்கு இழுக்க டில்லியிலேயே முயற்சி நடந்தது,'' என விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார். இது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி: என்னை கட்சியில் இருந்து நீக்கிய போது, சிவகுமாரை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி நடந்தது. இதற்காக டில்லியிலேயே திட்டமிட்டனர். நான் பா.ஜ.,வில் இருந்தால், அவரை கட்சிக்கு அழைத்து வர முடியாது என்பதால், என்னை நீக்கிய பின் முயற்சித்தனர். விஜயேந்திரா, தான் துணை முதல்வராகும் விருப்பத்தில், டில்லியில் சிவகுமாரை சந்தித்து பேச்சு நடத்தினார். இவரை அமித் ஷாவிடம் அழைத்து சென்றனர். ஆனால் அவர், இந்த கோரிக்கையை நிராகரித்தார். இந்த விஷயத்தை பா.ஜ.,வினரே, என்னிடம் கூறினர். அதன்பின் அமித் ஷா உத்தரவுபடி, தங்களின் எண்ணத்தை கை விட்டதாக, பிரஹலாத் ஜோஷி கூறினார். ஆனால், சிவ குமாரை பா.ஜ.,வுக்கு அழைத்து வர, முயற்சி நடந்தது உண்மை. டிசம்பர் 19ல், காங்கிரசார் டில்லிக்கு செல்ல உள்ளனர். இப்போது பெலகாவியில் டின்னர் மீட்டிங், கோஷ்டி ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளன. எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறுவதற்காக, தனித்தனி ஆலோசனை கூட்டங்கள் நடக்கின்றன. எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின் அறையில், பா.ஜ.,வின் சில எம்.எல்.ஏ.,க்கள் என்னை சந்தித்தனர். 'உங்களை போன்ற தலைவர்கள், பா.ஜ.,வுக்கு அவசியம். கட்சிக்கு வாருங்கள்' என அழைத்தனர். நான் கட்சிக்கு திரும்பினால், எம்.எல்.ஏ.,வாக மட்டுமே திரும்ப மாட்டேன். பெரிய பதவிகளான மாநில தலைவர் அல்லது எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்தால், பா.ஜ.,வுக்கு வருவேன் என, கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 8 மாதங்கள் மவுனம் ஏன்? மாநில பா.ஜ., தலைவர் அல்லது எதிர்க்கட்சி தலைவர் பதவியை எத்னால் எதிர்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால் எரிச்சலடைந்த அவர், பகிரங்கமாகவே மேலிடத்தின் மீது, அதிருப்தி தெரிவித்தார். 2,000 கோடி ரூபாய் கொடுத்தால், முதல்வர் பதவி கிடைக்கும். என்னிடம் பணம் இல்லாததால், பதவி கிடைக்கவில்லை என, குற்றம்சாட்டினார். கட்சி மேலிடம் பல முறை எச்சரித்தும், எத்னால் நாக்கை கட்டுப் படுத்தவில்லை. இதனால், அவரை, பா.ஜ.,வில் இருந்து நீக்கி, நடப்பாண்டு மார்ச் 27ல் மேலிடம் உத்தரவிட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, எட்டு மாதங்கள் மவுனமாக இருந்த அவர், இப்போது திடீரென, சிவகுமாரை பா.ஜ.,வுக்கு அழைத்து வர முயற்சி நடந்ததாக கூறியுள்ளார். முதல்வர் பதவிக்காக, சித்தராமையா, சிவகுமார் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த விஷயத்தை அவர், வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதற்கு முன் விஜயேந்திரா, சிவகுமாருடன் உள் ஒப்பந்தம் செய்துள்ளதாக, பலமுறை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இவரது குற்றச்சாட்டு, சித்தராமையாவே முதல்வராக நீடிக்க, மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதை போன்றுள்ளது . சிவகுமார் பா.ஜ.,வுக்கு செல்ல தயாராக இருந்தார் என்பதை, காங்., மேலிடத்தின் காதுக்கு கொண்டு சென்று, அவர் முதல்வராவதை தடுக்கும் நோக்கமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை