பெங்களூரு: குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில், பெங்களூரு நகர் கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கை: குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து, கர்நாடக உரிமைகள் ஆணையம் ஆய்வு நடத்தியது. குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில், பெங்களூரு நகர் பின் தங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களுடன் ஒப்பிட்டால், பெங்களூரு கடைசி இடத்தில் உள்ளது. கோலார், விஜயபுரா, கதக், பெலகாவி மாவட்டங்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இம்மாவட்டங்களிலும், குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில், குடகு, உடுப்பி மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில், பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களில் மைசூரு, மாண்டியா, பெங்களூரு ரூரல், துமகூரு, பெலகாவி, தட்சிணகன்னடா, சிக்கபல்லாபூர், ராம்நகர் மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிட்டால், பெங்களூரில் எட்டு மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியான விஷயமாகும். கர்நாடக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய ஒருங்கிணைப்பில், சமுதாயம், பொருளாதார மாற்றத்துக்காக பணியாற்றும் அமைப்பின் மாதேஸ்வரன் மற்றும் வாணி ஆய்வு நடத்தினர். ஆய்வில் கிடைத்த தகவல்கள், பெங்களூரில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு விஷயத்தில், எச்சரிக்கை மணியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.