பெங்களூரு திருவிழா துவக்கம் 50 பூங்காக்களுக்கு மறுவாழ்வு
பெங்களூரு: ''பெருநகர பெங்களூரு ஆணையத்தின் கீழ், நகரில் 50 பூங்காக்கள் மேம்படுத்தப்படும்,'' என்று மாநகராட்சியின் வனத்துறை சிறப்பு கமிஷனர் பிரீத்தி கெலாட் உறுதி கூறினார்.பெங்களூரில் உள்ள பூங்காக்களில் நடைபயிற்சி செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நகரில் உள்ள 28 தொகுதிகளிலும் ஒரு பூங்காவை தேர்ந்து எடுத்து அங்கு 'பெங்களூரு திருவிழா' என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.இதன்படி பசவனகுடியில் உள்ள பியூகல் ராக் பூங்காவில், பெங்களூரு திருவிழா நேற்று துவங்கியது.மாநகராட்சி வனத்துறை சிறப்பு கமிஷனர் பிரீத்தி கெலாட் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:பெங்களூரு நகரில் 1,287 பூங்காக்களை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இதில் 50 பூங்காக்கள் பெருநகர பெங்களூரு ஆணையத்தின் கீழ் மேம்படுத்தப்படும். அந்த பூங்காக்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். பொதுமக்கள் நேரத்தை செலவிடவும், சுற்றுச்சூழலை ரசிக்கவும் நகரில் உள்ள பூங்காக்கள் தினமும் காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளன.பூங்காக்களை சுத்தமாக வைத்திருப்பதும், பராமரிப்பதும் நம் கடமை. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பூங்காவில் பெங்களூரு திருவிழா நடத்தப்படுவது புதுமையான முயற்சி. கலைநிகழ்ச்சிகளும் நடக்கும். குறிப்பாக குழந்தைகள் கவரும் வகையிலான கலைநிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், 'மரங்களை பாதுகாப்போம்' என்ற பதாகையை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.