உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நவ., 1ல் பெங்களூரு - மும்பை இடையே படுக்கை வசதி ரயில் துவக்கம்

நவ., 1ல் பெங்களூரு - மும்பை இடையே படுக்கை வசதி ரயில் துவக்கம்

பெங்களூரு: தென்மாநிலங்களில் முதன் முறையாக, படுக்கை வசதி கொண்ட, 'வந்தே பாரத்' ரயில் சேவை பெங்களூரு - மும்பை இடையில் வரும் 1ம் தேதி துவங்குகிறது. 1,095 கி.மீ., துாரத்தை இந்த ரயில் 16 மணி நேரத்தில் கடக்கும். 'கர்நாடக தலைநகர் பெங்களூரையும், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையையும் இணைக்கும் வகையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த பிப்ரவரியில் அறிவித்தார். அறிவிப்பு வெளியாகி எட்டு மாதங்கள் ஆகியும், ரயில் இயக்குவது தொடர்பான எந்த அறிகுறியும் தென்படாமல் இருந்தது. 16 பெட்டிகள் இந்நிலையில் ரயில் இயக்குவது தொடர்பாக, கடந்த 1ம் தேதி சில அறிவிப்புகள் வெளியாகின. ரயிலுக்கு வண்டி எண்களாக 27651/ 27652 கொடுக்கப்பட்டுள்ளன. அனந்த்பூர், குண்டக்கல், ராய்ச்சூர், கலபுரகி, சோலாபூர், புனே, கல்யாண் ஆகிய நிலையங்களில், ரயில் நின்று செல்லும் என்றும், வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரயில் சேவை துவங்குவதற்கான, அதிகாரபூர்வ தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 'நவம்பர் 1ம் தேதி பெங்களூரு - மும்பை வந்தே பாரத் ரயில் இயங்கும்' என, கர்நாடகாவை சேர்ந்த மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா சில தினங்களுக்கு முன், 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், பெங்களூரு - மும்பை இடையே இயங்க உள்ள படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட ரயிலை யார்டு பகுதியில் நிறுத்தி, ரயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்தனர். மத்திய அமைச்சர் வரும் 1ம் தேதி எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில், மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, மத்திய தொழிலாளர் நல இணையமைச்சர் ஷோபா உள்ளிட்டோர் ரயில் சேவையை துவக்கி வைக்கின்றனர். முதல் நாள் பயணத்தில் பள்ளி மாணவர்கள், ரயில்வே ஊழியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 2ம் தேதியில் இருந்து வணிக ரீதியிலான பயணம் துவங்குகிறது. பெங்களூரு - மும்பை இடையிலான 1,095 கி.மீ., துாரத்தை, 16 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கும். மற்ற ரயில்களை விட இது 8 மணி நேரம் குறைவு.

என்னென்ன வசதிகள்?

முதல் வகுப்பு பெட்டியில் கேபின் அறைகள் உள்ளன. ஒரு கேபின் அறையில் இரண்டு படுக்கைகள் மட்டும் உள்ளன. மேலடுக்கு படுக்கைக்கு ஏறி செல்ல படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. இது முதியோர், உடல் பருமனாக இருப்போருக்கு நிச்சயம் உதவும். கதவுகளை உள்ளே இருந்தும் பூட்டி கொள்ள முடியும் என்பதால், தனியுரிமைக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது.சூடான மற்றும் குளிர்ந்த நீர் வசதியுடன் கூடிய நவீன குளியலறை வசதியும் உள்ளது. 'சென்சார்' மூலம் இயங்கும், 'பயோ வேக்குவம்' கழிப்பறைகள் உள்ளன. பட்டனை அழுத்தி ஊழியர்களை அழைக்கும், 'கால் சிஸ்டம்' உள்ளது. படுக்கைகள் மிகவும் அகலமானவை. ஒட்டுமொத்தமாக விமானத்தில், 'பிசினஸ் கிளாஸ்' அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைக்கு இணையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு பெட்டிகளிலும் அதிநவீன வசதிகள் உள்ளன. சாதாரண 'ஸ்லீப்பர் கிளாஸ்' ரயில்களை போன்று இல்லாமல் முற்றிலும் மாறுபட்டுள்ளது. 'ரீடிங் லைட், மொபைல் சார்ஜர்' வசதிகள் உள்ளன. அனைத்து பெட்டிகளிலும் ரயில் செல்லும் பாதையை பார்க்கும் டிஜிட்டல் திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.

'ஏசி'யை கட்டுப்படுத்தும் வசதி

இந்த ரயிலில் உள்ள அனைத்தும், 'ஏசி' பெட்டிகள். பயணியர் தேவைக்கு ஏற்ப, 'ஏசி'யை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. ரயில் அதிர்வுகள், குலுங்கல்களை குறைக்க நவீன, 'சஸ்பென்ஷன்' தொழில்நுட்பம் உள்ளது. அனைத்து பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில்கள் மோதுவதை தடுக்கும், 'கவச்' தொழில்நுட்பம் உள்ளது. மாற்றுத்திறனாளிகளுககாக சிறப்பு படுக்கை, கழிப்பறை அமைப்புகள் என பல வசதிகள் உள்ளன.

823 படுக்கைகள்

'வந்தே பாரத்' ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள்; 823 படுக்கைகள் உள்ளன. 'ஏசி' 3 அடுக்கு பெட்டிகள் 11; ஏசி 2 அடுக்கு பெட்டிகள் 4; ஏசி முதல் வகுப்பு பெட்டி ஒன்று.முதல் வகுப்பு பெட்டியில் மொத்தம் 24 படுக்கைகள்; இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 188 படுக்கைகள்; மூன்றாம் அடுக்கு பெட்டிகளில் 611 படுக்கைகள் இருக்கும். இந்த ரயிலில் முழுமையாக உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மட்டும் கிடைக்கும். ஆர்.ஏ.சி., அல்லது வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் என்பதே கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி