ஒரு மாதத்தில் ரூ.1,000 கோடி வசூல் பெங்களூரு மாநகராட்சி சாதனை
பெங்களூரு: ஒரு மாதத்தில் 1,000 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்து, பெங்களூரு மாநகராட்சி மிக பெரிய சாதனையை படைத்து உள்ளது.பெங்களூரு மாநகராட்சிக்கு, அதிக வருவாய் ஈட்டி தருவதில் சொத்து வரியின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால், சொத்து வரி வசூலிப்பதில், மாநகராட்சி நிர்வாகம் கடந்த காலங்களில் தடுமாறி வந்தது.சொத்து வரி வசூலிப்பதை அதிகப்படுத்த 'ஒன் டைம் செட்டில்மென்ட்' திட்டம், செலுத்த தவறியவர்களுக்கு அபராதம் விதிப்பு என்பது போன்ற புதிய விதிகள், கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.இதனால், 2024 - 25ம் நிதியாண்டில், முதன் முறையாக 4,927 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இது மாநகராட்சி வரலாற்றில் பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.இந்நிலையில், நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாதவர்கள், கடந்த மாதம் 30ம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தினால், ஐந்து சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதை பயன்படுத்தி கொண்டு, லட்சக்கணக்கானோர் தங்கள் சொத்து வரியை செலுத்தினர். இதனால், மாநகராட்சிக்கு வரியை வசூலிப்பது சுலபமானதுூ நல்ல வருவாயும் கிடைத்தது. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என கூறப்பட்டது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ஏப்ரல் 1 முதல் 27ம் தேதி வரை, 938.72 கோடி ரூபாய் சொத்து வரி வசூலானது. மாதத்தின் இறுதி நாட்களான 28 முதல் 30ம் தேதிக்குள் 200 கோடி ரூபாய் வரி வசூலானது. ஒரு மாதத்தில் 1,000 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்து, மாநகராட்சி வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதில், பெங்களூரு தெற்கு, மஹாதேவபுரா மண்டலங்கள் முன்னிலையில் உள்ளன. ஆர்.ஆர்., நகர், தாசரஹள்ளி, எலஹங்கா மண்டலங்கள் பின்தங்கி உள்ளன. கடந்த மாதம் நீண்ட காலமாக வரி செலுத்தாத 18,425 சொத்துகளில் இருந்து 18.31 கோடி ரூபாய் வரி வசூலிகப்பட்டது. வரி செலுத்தாத 10,133 பேரின் சொத்துகள்; 83,039 வணிக சொத்துகள் 'சீல்' வைக்கப்பட்டு உள்ளன.இதுவரை வரி செலுத்தாத 1,015 சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 1.39 கோடி ரூபாய் வரி வசூலிக்க வேண்டி உள்ளது. மேலும், வரி வசூலில் துல்லியமான புள்ளி விபரங்கள் வரும் சனிக்கிழமை தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.