கிக் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு உறுதி செய்யும் மசோதா நிறைவேற்றம்
பெங்களூரு : கர்நாடக சட்டசபையில், 'கிக்' தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு, நலனை உறுதி செய்யும் மசோதாவை நேற்று தாக்கல் செய்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் பேசியதாவது: ஸ்விகி, சொமோட்டோ, மீசோ, அமேசான் உள்ளிட்ட, ஆன்லைன் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், கிக் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் சமூக பாதுகாப்பு, நலனை உறுதி செய்யும் மசோதாவை தாக்கல் செய்து இருக்கிறேன். கிக் தொழிலாளர்களுக்கு வாரியம் உருவாக்குவது; அங்கீரிக்கப்பட்ட தொழிலாளர்களை பதிவு செய்வதை இந்த மசோதா நோக்கமாக கொண்டு உள்ளது. தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவு, பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் தொழிலாளர்களுக்கு 1 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது. இதனை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மசோதா முன்மொழிந்துள்ளது. பல தொழிலாளர்கள் தினமும் 16 மணி நேரம் வேலை செய்து 1,800 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இதன்மூலம் அவர்களின் உடல்நிலையில் பாதிப்பும் ஏற்படுகிறது. இதற்கு ஒரு தீர்வு காணவும் நாங்கள் உறுதியாக உள்ளோம். தற்போது கர்நாடகாவில் 4 லட்சம் கிக் தொழிலாளர்கள் உள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 2 கோடிக்கு மேல், கிக் தொழிலாளர்கள் இருப்பர் என்று, நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். இதையடுத்து ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.