உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கிறிஸ்துவர் பிரிவில் 47 துணை ஜாதிகள் அரசு மீது கவர்னரிடம் பா.ஜ., புகார்

கிறிஸ்துவர் பிரிவில் 47 துணை ஜாதிகள் அரசு மீது கவர்னரிடம் பா.ஜ., புகார்

பெங்களூரு : ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைக்காக வெளியிடப்பட்ட ஜாதிகள் பட்டியலில், கிறிஸ்துவர் பிரிவில் புதிதாக 47 துணை ஜாதிகளை சேர்த்த மாநில அரசு மீது, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், பா.ஜ., புகார் செய்துள்ளது. கர்நாடகாவில் வரும் 22ம் தேதியில் இருந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக ஜாதிகள், துணை ஜாதிகள் பெயர் பட்டியலை அரசு வெளியிட்டது. இந்த பட்டியலில் கிறிஸ்துவர் பிரிவில் குருபா கிறிஸ்டியன், பிராமண கிறிஸ்டியன், விஸ்வகர்மா கிறிஸ்டியன், தேவாங்க கிறிஸ்டியன் உட்பட, 47 புதிய துணை ஜாதிகள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. புதிய துணை ஜாதிகள் பற்றி விவாதிக்க பெங்களூரு ராஜ்பவன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில், நேற்று காலை வட்ட மேஜை கூட்டத்திற்கு பா.ஜ., ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் எம்.பி.,க்கள் மைசூரு யதுவீர், பெங்களூரு சென்ட்ரல் மோகன், எம்.எல்.ஏ., சுனில்குமார், எம்.எல்.சி., ரவிகுமார் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், சில ஜாதிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தீர்மானம் இந்த கூட்டத்தில், '47 புதிய துணை ஜாதிகள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்; புதிய துணை ஜாதிகள் மூலம், மதமாற்றத்தை ஊக்குவிக்க முயற்சிக்கும் காங்கிரஸ் அரசின் எண்ணத்தை, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்ததும் ஹோட்டலில் இருந்து, ராஜ்பவனுக்கு பா.ஜ., தலைவர்கள் நடந்தே சென்றனர். கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, '47 புதிய துணை ஜாதிகளை கைவிட அரசுக்கு வலியுறுத்த வேண்டும்' என, மனுக் கொடுத்தனர். பின், யதுவீர் அளித்த பேட்டியில், ''ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவியல் பூர்வமாக அரசு நடத்த வேண்டும். கிறிஸ்துவர் பிரிவில் 47 புதிய துணை ஜாதிகளை சேர்த்து இருப்பது சரியல்ல. ''இதில் ஒக்கலிக கிறிஸ்துவர்கள், பிராமண கிறிஸ்துவர்கள் என்று உள்ளது. இதற்கு எந்த தேவையும் ஏற்படவில்லை. அரசின் இந்த செயல்பாடு மதமாற்றத்திற்கு வழிவகுக்கும். 47 புதிய துணை ஜாதிகள் பெயரை அரசு உடனடியாக நீக்க வேண்டும். நாங்கள் அளித்த மனுவை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக, கவர்னர் தாவர்சந்த் கெலாட் உறுதி அளித்துள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி