உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொப்பால் கவிசித்தப்பா நாயக் கொலை வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு பா.ஜ., வலியுறுத்தல்

கொப்பால் கவிசித்தப்பா நாயக் கொலை வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு பா.ஜ., வலியுறுத்தல்

பெங்களூரு: கொப்பால் கவிசித்தப்பா நாயக் கொலை சம்பவத்தை, என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க பா.ஜ.,வினர் வலியுறுத்தினர். கொப்பால் டவுன் பகுதியை சேர்ந்த கவிசித்தப்பா நாயக், 23, என்பவரை ஒரு கும்பல், கடந்த 3ம் தேதி கொலை செய்தது. முதல் கட்ட விசாரணையில், வேற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால், அவர் கொலை செய்யப்பட்டதாககூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், விசாரணையை துரிதப்படுத்தாமல், போலீசார் தாமதப்படுத்துவதாக பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து, பூஜ்ய வேளையில் சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: பா.ஜ., - விஜயேந்திரா: வேற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த, வால்மீகி சமுதாயத்தை சேர்ந்த, ஹிந்து அமைப்பின் தொண்டர் கவிசித்தப்பா நாயக்கை, ஆக., 3ல் மர்ம நபர்கள் கொலை செய்தனர். கொலை செய்வதற்கு முன்னர், சமூக வலை தளங்களில், குற்றவாளிகள் கத்தியை காண்பித்து மிரட்டல் விடுத்த வீடியோக்கள் உள்ளன. ஆனாலும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக இருந்துள்ளனர். கொலை சம்பவத்தை கண்டித்து, சமீபத்தில் கொப்பால் மாவட்ட பந்த் நடந்துள்ளது. கவிசித்தப்பா, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இதற்கு முன், மங்களூரில் சுஹாஷ் ஷெட்டி என்ற ஹிந்து அமைப்பு தொண்டர் கொலை போலவே, கொப்பால் சம்பவமும் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், 2 ஏக்கர் நிலமும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். சம்பவத்தை என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். மாநில போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சபாநாயகர் காதர்: சபையில் உள்துறை அமைச்சர் இல்லை. அவர் வந்ததும், பதில் அளிக்கும்படி அறிவுறுத்துகிறேன். இதை ஏற்க மறுத்த பா.ஜ., உறுப்பினர்கள் அனைவரும், எழுந்து நின்று இப்போதே அரசு தரப்பில் பதில் தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வேளையில், கன்னட வளர்ச்சி துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, காங்கிரசின் ராகவேந்திரா இட்னால் ஆகியோர், பேச முற்பட்டனர். சபாநாயகர்: பூஜ்ய வேளையில் விவாதிக்க அவகாசம் இல்லை. அரசு பதில் தந்தே ஆக வேண்டும் என்று பா.ஜ.,வினர் தொடர்ந்து வலியுறுத்தியதால், ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர்: அரசு தரப்பில், பதில் அளிக்க வைப்பதை நான் பார்த்து கொள்கிறேன். சமாதானமாக இருங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது. இதன்பின், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையில், பா.ஜ.,வினர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, கவிசித்தப்பா நாயக் கொலை சம்பவத்தை, என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க, அரசுக்கு உத்தரவிடும்படி மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை