உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாஜி மேயர்களை அவமதிக்கும் காங்., அரசு பா.ஜ., தலைவர் ரமேஷ் குற்றச்சாட்டு

மாஜி மேயர்களை அவமதிக்கும் காங்., அரசு பா.ஜ., தலைவர் ரமேஷ் குற்றச்சாட்டு

பெங்களூரு: 'கெம்பே கவுடா உருவாக்கிய பெங்களூரில் ஆட்சி நடத்திய மேயர்களை காங்கிரஸ் அரசு அவமதித்துள்ளது' என, பெங்களூரு மாநகராட்சி முன்னாள் ஆளுங்கட்சி பா.ஜ., தலைவர் ரமேஷ் குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு, அவர் எழுதிய கடிதம்: கடந்த 1876ல் அமைக்கப்பட்ட பெங்களூரு மாநகராட்சியில், சுதந்திரம் பெற்ற பின், மேயர் ஆட்சி நடைமுறை அமலுக்கு வந்தது. பெங்களூரு மாநகராட்சியின் முதல் மேயராக 1949ல் சுப்பண்ணா பொறுப்பேற்றார். 1955ல் தீன் தயாள் நாயுடு, இந்தரம்மா, சேஷாத்ரி கிருஷ்ண அய்யர், நாராயண் உட்பட ஒன்பது மேயர்கள் சிறப்பாக பணியாற்றினர். மேயர்களில் பலர் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில், நேரடியாக பங்கேற்றவர்கள். மேயர்களின் உருவப்படங்கள் மற்றும் பெயர் பலகைகள், மாநகராட்சி மத்திய அலுவலகத்தில், ஒழுங்காக பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் மாநகராட்சிக்கு பதிலாக ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் நிர்வாகத்தை கொண்டு வந்துள்ள சித்தராமையா அரசு, இதுவரை இருந்த மேயர் அறையை, ஜி.பி.ஏ., தலைவர் அதாவது முதல்வர் அறையாக மாற்றியுள்ளது. அங்கிருந்த முன்னாள் மேயர்களின் உருவப்படங்கள், அவர்கள் பற்றிய தகவல் பலகைகளை அகற்றி, அவமதிக்கும் வகையில் மாநகராட்சி மத்திய அலுவலக வளாகத்தில் உள்ள, ஊழியர்கள் பவனின் பக்கத்து அறையில் போட்டுள்ளனர். இது முன்னாள் மேயர்களை அவமதிப்பதாகும். இந்தியாவின் ஜனநாயக நடைமுறையில், ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், கவர்னர் உட்பட முக்கியமான பதவிகளில், மேயர் பதவியும் ஒன்றாகும். இனியாவது தன் அரசின் தவறை சரி செய்து கொண்டு, 1949 முதல் 2020 வரை, மேயராக இருந்தவர்களின் உருவப்படங்கள், அவர்களின் விபரங்களை, பொருட்காட்சி போன்று, விசாலமான அறையில் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி