| ADDED : நவ 19, 2025 08:22 AM
பெங்களூரு: பெங்களூரு ராஜாஜிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் குமார், போக்குவரத்து போலீஸ்காரராக நேற்று பணியாற்றினார். சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்டும்படி, வாகன ஓட்டியருக்கு அறிவுரை கூறினார். பெங்களூரு ராஜாஜிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் குமார், 70. நேற்று காலை பாஷ்யம் சதுக்கம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த போக்குவரத்து போலீஸ் கூடாரத்திற்கு சென்ற அவர், பணியில் இருந்த போலீஸ்காரரிடம், “நான் சிறிது நேரம் போக்குவரத்து போலீஸ்காரராக வேலை செய்ய உள்ளேன்,” என்று கூறினார். போக்குவரத்து போலீசார் அணியும் ஜாக்கெட் அணிந்து கொண்டார். சாலை விதிகளை மீறி, வாகன ஓட்டியர் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்று கண்காணித்தார். போக்குவரத்து விதிகளை மீறிய, வாகன ஓட்டியருக்கு, “சாலை விதிகளை கடைப்பிடியுங்கள்,” என, அறிவுரை கூறினார். பின், அவர் அளித்த பேட்டி: பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, போக்குவரத்து போலீசார் எதிர்கொள்ளும் சவால்களை நான் நேரடியாக அனுபவித்து உள்ளேன். நீண்ட நாட்களாக இந்த பணியை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காக போக்குவரத்து இணை கமிஷனர் கார்த்திக் ரெட்டியின் அனுமதி பெற்றேன். ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது; மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டுவது; நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது, பொதுமக்களிடம் நிரந்தர மனநிலையாக மாறிவிட்டன. நான் கவனித்த பல வாகனங்களின் ஓட்டுநர்கள், சிக்னல்களில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் கொண்டு வந்து வாகனத்தை நிறுத்துகின்றனர். விதிகளை மீற வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.