முகநுாலில் வீடியோ பதிவிட்டு பா.ஜ., தொண்டர் தற்கொலை
ஆனேக்கல்: நகராட்சி கவுன்சிலர்கள், மண்டல தலைவர் உள்ளிட்டோர் தொல்லை கொடுப்பதாக முகநுாலில் வீடியோ பதிவிட்டு, பா.ஜ., தொண்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஹாசன் மாவட்டம், பேலுாரை சேர்ந்தவர் பிரவீன் கவுடா, 35. பா.ஜ., தொண்டர். பெங்களூரு ரூரல் ஆனேக்கல்டவுனில் வசித்தார்.நேற்று முன்தினம் இரவு முகநுாலில் வீடியோ பதிவிட்டார்.அந்த வீடியோவில், 'கடந்த இரண்டு மாதங்களாக மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். இதனால் தற்கொலை செய்கிறேன்.'என் மரணத்திற்கு சமந்துார் கிரண், ஹரிஷ், கோகுல், பாஸ்கர், நாராயணப்பா, தோத்தஹகடே மது கவுடா, சரவணா, ஆனேக்கல் நகராட்சி பா.ஜ., கவுன்சிலர்கள் பாக்யம்மா, சீனிவாஸ், ஆனேக்கல் பா.ஜ., மண்டல தலைவர் முனிராஜ் கவுடா ஆகியோர் தான் நேரடி காரணம்.'யாரை விடுவித்தாலும் கிரணை மட்டும் போலீசார் விடுவிக்கக் கூடாது. முனிராஜ் கவுடா வீட்டிற்கு வரவழைத்து என்னை தாக்கினர். என் மொபைல் போனை பறித்தனர். எனக்கு தொல்லை கொடுத்தனர்.நான் இறந்த பின், என் உடலில் உள்ள காயங்களை போலீசார் ஆராய வேண்டும்' என்று பேசி இருந்தார்.பின், மரத்தில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.பிரவீன் கவுடா சகோதரி சவுமியா கூறுகையில், ''என் சகோதரர் பிரவீன் கவுடா, ஸ்வேதா என்பவருக்கு கடன் கொடுத்திருந்தார். அவர் பணத்தை திரும்ப தரவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. ஸ்வேதா தன் உறவினரான நகராட்சி கவுன்சிலர் பாக்யம்மாவிடம் கூறினார். பண பிரச்னை பற்றி பேசுவதற்காக பிரவீன் கவுடா, பாக்யம்மா தன் வீட்டிற்கு வரவழைத்தார். அங்கு வைத்து அவரை தாக்கி உள்ளனர். இதனால் என் சகோதரர் தற்கொலை செய்து உள்ளார்,'' என்றார்.ஆனேக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.