சாலையில் வீசப்பட்ட உடல் துண்டுகள்: டி.என்.ஏ., பரிசோதனை நடத்த திட்டம்
துமகூரு : சாலையில் பிளாஸ்டிக் கவர்களில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் துண்டுகள், காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். இதை டி.என்.ஏ., பரிசோதனை மூலம் கண்டறிய முடிவு செய்துள்ளனர். துமகூரு, கொரட்டகரே தாலுகாவின் சிம்புகானஹள்ளி கிராமம் அருகில், இம்மாதம் 7ம் தேதியன்று மதியம், சாலையில் பிளாஸ்டிக் கவர்களில் மனித உடலின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாய் ஒன்று இழுத்துச் சென்றதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த விவசாயி ஒருவர், 112ல் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தார். அதன்பின் அங்கு வந்த கொரட்டகரே போலீசார், சுற்றுப்பகுதிகளில் தேடினர். பல இடங்களில் பிளாஸ்டிக் கவர்களில் கிடந்த உடல் துண்டுகளை கண்டுபிடித்தனர். சிறிது தொலைவில் பெண்ணின் தலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் முகம் அடையாளம் தெரியாதபடி சிதைக்கப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்டது யார் என்பதை கண்டுபிடிக்கும் நோக்கில், போலீசார் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தனர். பெள்ளாவி கிராமத்தை சேர்ந்த பெண்ணாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. துமகூரின், பெள்ளாவி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி தேவம்மா, 42. இவர் ஆகஸ்ட் 3ம் தேதி, தன் மகளை பார்ப்பதற்காக ஊர்டிகெரே கிராமத்துக்கு சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய கணவர், பெள்ளாவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தற்போது கொலை செய்யப்பட்டு துண்டுகளாக்கப்பட்ட உடல், லட்சுமி தேவம்மாவாக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அது அவர் அல்ல என, குடும்பத்தினர் கூறுகின்றனர். எனவே டி.என்.ஏ., பரிசோதனை செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர்.