பெங்களூரு: காந்தாரா படத்தில் கடவுளை விமர்சித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததால், பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட போதும், பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில், காந்தாரா படத்தில் கடவுளை பற்றி, நடிகர் ரன்வீர் சிங், ஆட்சேபனைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது: காந்தாரா படத்தில் ரிஷப்பின் அற்புதமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே என் நோக்கமாக இருந்தது. ஒரு நடிகராக, அந்த குறிப்பிட்ட காட்சியை, அவர் நடிக்க எவ்வளவு உழைப்பு தேவைப்படும் என்பது எனக்கு தெரியும். அதற்காக அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டின் ஒவ்வொரு கலாசாரம், பாரம்பரியம், நம்பிக்கையையும் நான் எப்போதும் மதிக்கிறேன். யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தியிருந்தால், நான் மனதார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில், ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் வக்கீல் பிரசாந்த் மெத்தல் அளித்த புகார்: கோவாவில் கடந்த நவ., 28ல் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேசினார். அப்போது காந்தாரா படத்தில் சித்தரிக்கப்பட்ட, 'தெய்வ கோலா'வின் பாரம்பரியத்தை வெளிப்படையாக கேலி செய்துள்ளார். கர்நாடக கடலோர பகுதி மக்கள் வழிபடும் 'பஞ்சுருளி' தெய்வீக சக்தியை வெளிப்படையாக ஆபாசமாகவும், இழிவாகவும், நகைச்சுவையாகவும் பேசியுள்ளார். மக்கள் புனிதாக கருதும் தெய்வத்தை 'பூத்' (பெண் பேய்) என்று குறிப்பிட்டார். நம் மாநிலத்தின் தலைமை தெய்வமான சாமுண்டீஸ்வரி தான் அப்படத்தில் காண்பிக்கப்பட்டு உள்ளது. அவர், வேண்டுமென்றே ஹிந்து நம்பிக்கைகளை புண்படுத்தி உள்ளார். பல லட்சம் பேர் பின் தொடரும் ஒரு நடிகர், காந்தாரா திரைப்படத்தை மட்டுமல்ல, துளு மொழி பேசுபவர்களின் பாரம்பரியத்தையும், ஆன்மிக நம்பிக்கையையும், சர்வதேச மேடையில் நையாண்டி செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, ஹிந்துக்களுக்கு மன வேதனை, கோபம், வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பொது அமைதியை குலைத்து, சமூகங்கள் இடையே பகைமையை வளர்க்கக்கூடும். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.