| ADDED : செப் 06, 2025 06:50 AM
பெங்களூரு: நிலம் வழங்க பயனாளிகளிடம் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியானதால், 'போவி' மேம்பாட்டு ஆணைய தலைவர் ரவிகுமார் பல அழுத்தங்களுக்கு மத்தியில் நேற்று ராஜினாமா செய்தார். கர்நாடக அரசின் சமூக நலத்துறைக்கு உட்பட்ட போவி மேம்பாட்டு ஆணையம், எஸ்.சி., சமூகத்தை சேர்ந்தவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவது; விவசாயிகளுக்கு நிலம் வழங்குவது உட்பட பணிகளை செய்து வருகிறது. இதன் தலைவராக ரவிகுமார் இருந்தார். இவர், நிலம் கேட்டு வந்த பயனாளிகளிடம், 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ, வைரலானது. இதற்கு ரவிகுமார், 'அந்த வீடியோவில் இருப்பது நான் தான். ஆனால், நான் லஞ்சம் கேட்பது போன்று 'ஏ.ஐ.,' மூலம் மாற்றி உள்ளனர்' என்றார். இதற்கிடையில், முதல்வர் சித்தராமையா, ரவிகுமாரை தொடர்பு கொண்டு ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தினார். ஆனால், ராஜினாமா செய்ய மறுத்த அவர், முதல்வருக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கும் அனுப்பிய தகவலில், 'நான் எந்த தவறும் செய்யவில்லை. 'ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் என்னை குறிவைத்துள்ளனர். முறையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, நான் ராஜினாமா செய்யமாட்டேன்' என்று குறிப்பிட்டிருந்தார். மீண்டும் முதல்வரை சந்திக்க ரவிகுமார் முயற்சித்தும், முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதற்குள் கட்சித் தலைவர்களிடம் இருந்து வந்த தொடர் அழுத்தத்தால், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.