நவம்பரில் அமைச்சரவை விஸ்தரிப்பு காங்., தலைமை கொறடா பரபரப்பு
ஹாவேரி : ''நவம்பரில் அமைச்சரவை விஸ்தரிக்கப்படும். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க கூடும்,'' என காங்கிரஸ் தலைமை கொறடா சலீம் அகமது தெரிவித்தார்.ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:வரும் நவம்பரில், அமைச்சரவை விஸ்தரிக்கப்படும். அமைச்சர் பதவி இழந்தவர்களுக்கு கட்சியில் முக்கியமான பதவி கிடைப்பது உறுதி. அமைச்சரவை விஸ்தரிக்கும் போது, புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து மேலிடம் ஆலோசிக்கிறது. மேலிடத்தின் முடிவே உறுதியானது.சில அமைச்சர்கள், மாநில தலைவரை மாற்ற வேண்டும் என கூறுவது குறித்து எனக்கு தெரியவில்லை. முதல்வர் மாற்றம், மாநில தலைவர் மாற்றம் குறித்து, பேசக்கூடாது என காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே இது பற்றி நான் எதுவும் பேசமாட்டேன்.அனைத்து விஷயங்கள் குறித்து, கட்சியில் ஆலோசனை நடத்தப்படும். பா.ஜ.,வில் சர்வாதிகாரி உள்ளார். மத்திய அரசு, நம் மாநிலத்தை மாற்றாந்தாய் போன்று நடத்துகிறது. நமக்கு வழங்க வேண்டிய நிதியுதவியை வழங்கவில்லை. இதை பெற்றுத்தருவதில், நமது எம்.பி.,க்களுக்கு ஆர்வம் இல்லை. நரேந்திர மோடி அரசு பொய் சொல்கிறது. நாங்கள் சொன்னபடி நடந்து கொண்டோம். இதை பா.ஜ.,வினரால் சகிக்க முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில் கலபுரகி ஜேவர்கியில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ., அஜய்சிங் அளித்த பேட்டி:எனது தந்தை தரம்சிங், காங்கிரசில் முதல்வராக இருந்தவர். கட்சி மேலிடம் கூறியதால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு கொடுத்தார். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே, கட்சிக்கு விசுவாசமாக உள்ளோம். மூன்றாவது முறையாக நான் எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். அமைச்சரவையில் மாற்றம் நடந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.அக்டோபர் மாதம் அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் என்று, முதல்வர் சித்தராமையா எங்களிடம் கூறி உள்ளார். தற்போதைக்கு முதல்வர் நாற்காலி காலியாக இல்லை. இதையும் அவர் உறுதிபடுத்தி உள்ளார். கல்யாண கர்நாடகா மண்டல வளர்ச்சி கழகத்தின் தலைவராக எனது பணியை சிறப்பாக செய்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த பகுதியை முன்னேற்ற வேண்டும் என்பது எனது குறிக்கோள்.இவ்வாறு அவர் கூறினார்.