உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜாதியை சொல்லி திட்டியதாக பெண் அதிகாரி மீது வழக்கு

ஜாதியை சொல்லி திட்டியதாக பெண் அதிகாரி மீது வழக்கு

பெங்களூரு: ஜாதியை சொல்லி திட்டியதாக கன்னடம், கலாசார துறை இயக்குநர் காயத்ரி மீது, நாட்டுப்புற கலைஞர், போலீசில் புகார் அளித்துள்ளார்.பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீசில், நாட்டுப்புற கலைஞர் ஜோகிலா சித்தராஜு என்பவர், கன்னடம் கலாசார துறை இயக்குநர் காயத்ரி மீது அளித்துள்ள புகார்:நாட்டுப்புற கலைஞரான நான், 35 ஆண்டுகளாக கன்னடம், கலாசார துறையின் பல்வேறு நிகழ்ச்சிகள், அரசு சாரா திட்டங்கள், சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.ஜூலை 11ம் தேதி மாலை 4:30 மணிக்கு கன்னடம் கலாசார துறை இயக்குநர் அலுவலகத்துக்கு சென்றேன். அங்கிருந்த இயக்குநர் காயத்ரியிடம், மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொகையை வழங்க கோரிக்கை விடுத்தேன்.நான் தலித் என்பது அவருக்கு தெரிந்தும், 'உங்களை போன்றவர்களிடம் இருந்து நிர்வாகத்தை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை' என கூறி, முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்.'உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பேன்' என்று நான் கூறியபோது, தன் மேஜையில் இருந்த கணினி மவுஸ் பேடை, என் மீது வீசினார்.இதை என்னுடன் வந்த மற்றொரு கலைஞர் நாகேஷ், தன் மொபைல் போனில் வீடியோ எடுக்க முயன்றார். அவரது மொபைல் போனை பறித்துக் கொண்டு தாக்கினார்.இச்சம்பவம் அனைத்தும் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதை ஆய்வு செய்தால் உண்மை தெரியும். இது தொடர்பாக, 'ஜூலை 14ல் சமரச கூட்டம் நடத்தப்படும்' என, காயத்ரி கூறியிருந்தார். நாங்களும் அன்று சென்றோம். ஆனால், அவர் வரவில்லை.இதுதொடர்பாக முதல்வரிடமும் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளோம். ஜாதியை சொல்லி திட்டிய அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.இதையடுத்து, காயத்ரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி