உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திருட்டில் ஈடுபடும் நேபாள கும்பலை பிடிப்பது சவால்!: உண்மையை ஒப்புக் கொண்ட பெங்களூரு கமிஷனர்

திருட்டில் ஈடுபடும் நேபாள கும்பலை பிடிப்பது சவால்!: உண்மையை ஒப்புக் கொண்ட பெங்களூரு கமிஷனர்

கர்நாடக தலைநகராக உள்ள பெங்களூரில், ஐ.டி., உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்கள் வீட்டில் உள்ள முதியோர், குழந்தைகளை பராமரித்துக் கொள்ள, வீட்டு வேலைக்கு ஆள்சேர்ப்பது அதிகரித்துள்ளது. முதலில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், வீட்டு வேலைக்கு அதிகம் பணி அமர்த்தப்பட்டனர்.ஆனால் சில ஆண்டுகளாக நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர்களை, பெங்களூரில் வீட்டு வேலைக்கு பணி அமர்த்துவது அதிகரித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் காவலாளியாகவும் வேலை செய்கின்றனர். முதலில் கட்டட உரிமையாளர்களின் நம்பிக்கை பெறும் அவர்கள், முதலாளி குடும்பத்தினர் வெளியூர் செல்லும் சமயங்களை எதிர்பார்த்து, நகை, பணம், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

காங்., பிரமுகர்

பெங்களூரின் ஹெச்.ஏ.எல்., சாஸ்திரிநகரில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகரும், தொழில் அதிபருமான ரமேஷ் பாபு கடந்த மாதம் 28ம் தேதி தன் குடும்பத்தினருடன் திருப்பதி சென்றபோது, அவரது வீட்டில் வேலை செய்த நேபாள தம்பதி ராஜ், தீபா ஆகியோர், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்கம், பத்து லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர். அவர்களை நேபாளம் சென்று ஹெச்.ஏ.எல்., போலீசார் கைது செய்தனர்.இதுபோல கடந்த ஆண்டு விஜயநகரில் அரிஹந்த் என்ற, நகைக்கடை உரிமையாளர் வீட்டில் வேலை செய்த, நேபாள தம்பதியும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றனர். இதுபோல சஞ்சய்நகரில் வசிக்கும் மேயர் நாராயணசாமி வீட்டிலும், நேபாள காவலாளிகள் 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை திருடினர்.

விமானத்தில் பயணம்

நேபாள நாட்டினர் அரங்கேற்றும் தொடர் திருட்டுகள் குறித்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:பெங்களூரில் வசிக்கும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் காவலாளி, வீட்டு வேலைக்கு நேபாள நாட்டினர் அதிகம் பணி அமர்த்தப்படுகின்றனர். இவர்களில் ஒரு சிலர் வேலை செய்யும் வீட்டிலேயே திருடுகின்றனர். வீட்டில் எங்கு நகை, பணம் உள்ளது என்று தெரிந்த பின், கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகின்றனர்.வீடுகளின் உரிமையாளர்கள் இல்லாதபோது, கொள்ளையடித்துவிட்டு விமானத்தில் நேபாளம் தப்பிச் செல்கின்றனர். இவர்களை கண்டுபிடிப்பதும், கைது செய்வதும் போலீசாருக்கு, பெரும் சவாலாக உள்ளது.

இன்டர்போல் உதவி

விஜயநகரில் அரிஹந்த் என்ற, நகைக்கடை உரிமையாளர் வீட்டில் திருடிய நேபாள தம்பதியை கைது செய்ய, விஜயநகர் போலீசார் நேபாளம் சென்று 21 நாட்கள், தேடுதல் வேட்டையின் ஈடுபட்டனர். இறுதியில் தம்பதியை கைது செய்தனர். ஆனால் சில தொழில்நுட்ப பிரச்னையால், இன்னும் அவர்களை பெங்களூரு அழைத்து வர முடியவில்லை. அந்த தம்பதி நேபாள போலீஸ் வசம் உள்ளனர்.கொள்ளை வழக்கில் ஈடுபடும் நேபாள நபர்களை, அந்த நாட்டிற்கு சென்று கைது செய்வதில் சிக்கல் உள்ளது. இன்டர்போல் உதவியை நாட வேண்டி உள்ளது. வீட்டு வேலைக்கு நேபாள நாட்டினரை பணி அமர்த்துவதற்கு முன்பு, அவர்கள் பின்னணி என்பது பற்றி, வீடுகளின் உரிமையாளர்கள் பார்க்க வேண்டும்.அடையாள அட்டையை வாங்க வேண்டும். குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர் என்பதால், நேபாள நாட்டினர் பின்னணியை பார்க்காமல், சிலர் வீட்டு வேலைக்கு சேர்த்துக் கொள்கின்றனர். இதுவே கொள்ளை சம்பவத்திற்கு வழிவகுக்கிறது. நேபாள கொள்ளை கும்பல் குறித்து, பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை