வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கு பா.ஜ., கவுன்சிலர் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு
பல்லாரி: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், பல்லாரி மாநகராட்சி பா.ஜ., கவுன்சிலர் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று எட்டு மணி நேரம் சோதனை நடத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றனர். கர்நாடக அரசின் பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்டது, வால்மீகி மேம்பாட்டு ஆணையம். இந்த ஆணையத்திற்கு அரசு ஒதுக்கிய 189 கோடி ரூபாய் நிதியில் 94 கோடி ரூபாயை, வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி முறைகேடு செய்தது, கடந்த ஆண்டு மே மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். சொகுசு கார் நாகேந்திராவை தவிர அவரது ஆதரவாளர் நெக்குந்தி நாகராஜ், ஹைதராபாத் தனியார் வங்கி மேலாளர் சத்யநாராயண ராவ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் ஜாமினில் உள்ளனர். முறைகேடு செய்த பணத்தில் 20 கோடி ரூபாயை, லோக்சபா தேர்தலுக்காக பல்லாரி தொகுதியில் வெற்றி பெற பயன்படுத்தியதும், சொகுசு கார் வாங்கியதும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. குற்றப்பத்திரிகையிலும் கூறப்பட்டுள்ளது. முறைகேடு செய்யப்பட்ட பணம், வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதால், வங்கி நிர்வாகம் அளித்த புகாரில், சி.பி.ஐ.,யும் விசாரிக்க தொடங்கியது. சில தினங்களுக்கு முன்பு, நெக்குந்தி நாகராஜின் வங்கிக்கணக்கு விபரங்களை, சி.பி.ஐ., ஆய்வு செய்தபோது, பல்லாரி மாநகராட்சியின் 11வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் கோவிந்தராஜுலுவுக்கு, நெக்குந்தி நாகராஜ் 60 லட்சம் ரூபாய் கொடுத்ததும் தெரிந்தது. இதுபற்றி கேட்டபோது தன்னிடம் இருந்து கோவிந்தராஜுலு கடன் வாங்கி இருப்பதாக, நெக்குந்தி நாகராஜ் கூறி இருந்தார். ஆவணம் பறிமுதல் இந்நிலையில், பல்லாரி டவுன் காந்திநகர் மார்க்கெட் பகுதியில் உள்ள, கவுன்சிலர் கோவிந்தராஜுலு வீட்டிற்கு நேற்று காலை 6:00 மணிக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் 10 பேர் சென்றனர். கோவிந்தராஜுலு, அவரது குடும்பத்தினரிடம் இருந்து மொபைல் போன்களை வாங்கினர். பின், வீட்டில் சோதனை நடத்த ஆரம்பித்தனர். கோவிந்தராஜுலுவின் தந்தையும், முன்னாள் கவுன்சிலருமான குமாரசாமி வீட்டிலும், சி.பி.ஐ., சோதனை நடத்தியது. நேற்று மதியம் 2:00 மணி வரை, எட்டு மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. கோவிந்தராஜுலு, குமாரசாமி வீடுகளில் இருந்து, சில ஆவணங்களை கைப்பற்றி அதை மூட்டை கட்டி, சி.பி.ஐ., அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். கோவிந்தராஜுலு பா.ஜ.,வில் இருந்தாலும், நாகேந்திராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். நாகேந்திராவும் முன்பு பா.ஜ.,வில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாகேந்திராவுக்கு நேற்று பிறந்தநாள். அவரது பிறந்தநாள் அன்றே, வால்மீகி மேம்பாட்டு ஆணையம் தொடர்பான வழக்கில், சி.பி.ஐ., சோதனை நடத்தி உள்ளது.