உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசியலமைப்பை கடைப்பிடிக்க முதல்வர் அழைப்பு

அரசியலமைப்பை கடைப்பிடிக்க முதல்வர் அழைப்பு

பெங்களூரு: பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று தொடங்கிய சர்வதேச மிலாது நபி மாநாட்டில், “அரசியலமைப்பை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்,” என, முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார். மிலாது நபியின் 1,500வது ஆண்டையொட்டி, பெங்களூரில் உள்ள கர்நாடக கூட்டு மிலாது கமிட்டி சார்பில் அரண்மனை மைதானத்தில், 2 நாள் சர்வதேச மிலாது நபி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை 5:00 மணி அளவில் மாநாடு துவங்கியது. இரவு 8:00 மணிக்கு முதல்வர் சித்தராமையா வந்தார். அவருடன் விழா மேடைக்கு வீட்டுவசதி அமைச்சர் ஜமீர் அகமதுகான், முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமது ஆகியோரும் வந்தனர். மாநாடு நடத்தியவர்கள் சார்பில், சித்தராமையா கவுரவிக்கப்பட்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது: முகமது நபியின் போதனைகள், மனித வரலாற்றில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. முழு மனிதகுலத்திற்கும் நீதி, சமத்துவம், மத நல்லிணக்க பாதையை காட்டின. பசவண்ணரும் மனிதகுலத்தின் மதிப்பை போதித்தார். தீர்க்கதரிசிகள், அமைதியின் துாதர்கள். முழு மனித இனமும் அமைதி, பரஸ்பரம், சகோதரத்துவத்திற்காக பாடுபட வேண்டும். இது தீர்க்கதரிசிகளின் போதனை. நம் அரசியலமைப்பின் அடிப்படை கருத்து சகோதரத்துவம், சகிப்பு தன்மை ஆகும். அரசியலமைப்பை கடைப்பிடிப்பது நாம் அனைவரின் இலக்காக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேசி முடிக்கும்போது, 'ஜெய் ஹிந்த், ஜெய் கர்நாடகா, ஜெய் ஹிந்து முஸ்லிம்' என, சித்தராமையா குறிப்பிட்டார். தங்கள் குடும்பத்தினருடன் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவை சேர்ந்த மத தலைவர்கள் கலந்து கொண்டனர். மாலை 5:00 - 6:30 மணிகளுக்கு, கூட்டுத் தொழுகை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்