மேலும் செய்திகள்
ஹாசன் பொறுப்பு வேண்டாம் அமைச்சர் ராஜண்ணா அதிரடி
15-Feb-2025
பெங்களூரு: ''நாங்கள் யாருடைய பெயரையும் தவறாக பயன்படுத்தவில்லை. சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் பெயரை தவறாக பயன்படுத்த கூடாது,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார்.'சித்தராமையா எங்கள் தலைவர். அனைத்து தேர்தல்களிலும் அவர் தேவை. காங்கிரசின் தலைவர் அவர். கட்சி அவரை இரண்டு முறை முதல்வராக தேர்வு செய்துள்ளது. தினமும் அவரின் பெயரை குறிப்பிட்டு, அவரின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம்' என சிவகுமார் கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா நேற்று அளித்த பேட்டி:அகில இந்திய காங்கிரஸ் அனைத்தும் கூறிவிட்டது என்று கூறி, கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்த கூடாது. யாரிடம் இருந்தும் பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இக்கட்சியில் 50 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கருத்து வேறுபாடு
நல்லதுக்காக மட்டுமே பேசி வருகிறேன். எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை அல்ல. சிவகுமாருக்கும், எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. கருத்துகளில் மட்டுமே வேறுபாடு உள்ளது. நாங்கள் இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளோம்.கட்சி மேலிடம் கூறியது போன்று, லோக்சபா தேர்தல் முடியும் வரை, மாநில தலைவர் பதவி தொடர்பாக அமைதியாக இருந்தோம். அப்போதே கூடுதல் துணை முதல்வர் பதவி வழங்கியிருந்தால், லோக்சபா தேர்தலில் உதவியிருக்கும்.முழு நேரமாக இருந்தாலும் சரி, குறுகிய காலமாக இருந்தாலும் சரி. அனைத்தையும் கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சித்தராமையா தெரிவித்தார். அனைவரும் ஏற்றுக் கொண்ட பின்னர் தான், சித்தராமையா முதல்வரானார். புனையப்பட்ட கதைகள்
எங்களை எச்சரிக்க ஜி.சி.சந்திரசேகர் யார். அவர், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரா. அவருக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது. கிருஷ்ண லீலைகளில், எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து புராணங்களும் புனையப்பட்ட கட்டுக்கதைகள்.ராஜ்யசபா, மேல்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள், தேர்தலில் கட்சிக்காக ஓட்டு பெற்றுத் தந்தனரா. இத்தகையோர் கட்சிக்கு சுமையானவர்கள். அவர்களின் பின்னணி என்ன. மாநகராட்சி தேர்தலில் எவ்வளவு ஓட்டுகளை பெற்றுத் தந்தனர். 258 ஓட்டுகள் மட்டுமே பெற்ற அவர்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல தேவையில்லை.அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் விருப்பம். கட்சி மேலிடம் கூறும் போது, அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். அமைச்சர்களின் பணிகள் தொடர்பான அறிக்கைகள் பரிசீலித்து மதிப்பீடு செய்யப்படும்.கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து, என்ன சொல்ல வேண்டுமோ அதை சொன்னேன்; அனைத்தையும் கூற முடியாது. யாருக்கும் எதிராக மாநாடு நடத்தவில்லை. விருந்துக்கு தான் ஏற்பாடு செய்கிறோம். நேரமும், வாய்ப்பும் வரும் போது நாங்கள் கூடுவோம்.மாநாட்டின் தேதி இன்னும் முடிவாகவில்லை. ராகுல், கார்கேவை அழைப்போம். சுரண்டப்படும் சமூகத்தை ஒன்றிணைப்பதற்காகவே இம்மாநாட்டை நடத்துகிறோம். யாருக்கும் எதிரானது அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
15-Feb-2025