காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டும் தலா ரூ.50 கோடி... ஒதுக்கீடு!: எதிர்க்கட்சியினர் தொகுதிகளுக்கு 1 ரூபாய் கூட இல்லை
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் 'கிரஹ லட்சுமி'; அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் 'சக்தி'; பத்து கிலோ இலவச அரிசி வழங்கும் 'அன்னபாக்யா'; 200 யுனிட்டிற்கு கீழ் பயன்படுத்தினால் இலவச மின்சாரம் 'கிரகஜோதி'; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'யுவநிதி' ஆகிய, ஐந்து வாக்குறுதித் திட்டங்களை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் அறிவித்தது.இவற்றில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'யுவநிதி' திட்டத்தைத் தவிர மற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஆண்டிற்கு 52,000 கோடி ரூபாயை மாநில அரசு செலவு செய்கிறது.இந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதால், மாநிலத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்குவது இல்லை என்று, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே குற்றஞ்சாட்டினர். சிலர் ராஜினாமா செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.அரசிடம் இருந்து நிதி பெற்றுத் தரும் விஷயத்தில், மாவட்ட பொறுப்பு அமைச்சர்களும் தங்களை கைவிட்டதாக அவர்கள் புலம்பினர். அமைச்சர்கள் தங்களை மதிப்பது இல்லை என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் ஆட்சியில் பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆக்ரோஷம்
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் கொந்தளிப்பை பார்த்த காங்கிரஸ் மேலிடம், மாநில பொறுப்பாளரை பெங்களூரு அனுப்பி வைத்தது. அவரும், மூன்று நாட்கள் தங்கி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் குறைகளை கேட்டார். சொல்லி வைத்த மாதிரி அனைவரும், 'எங்கள் தொகுதிக்கு குறைந்த அளவிலேயே நிதியை கிடைக்கிறது. இதை வைத்து எந்த மேம்பாட்டுப் பணியும் செய்ய முடியவில்லை' என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர்.'வேலை செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில், நாங்கள் எப்படி வெற்றி பெறுவது; எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்கள் முன் செல்வது?' என, ஆவேசப்பட்டனர்.எம்.எல்.ஏ.,க்களை தொடர்ந்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய மேலிடப் பொறுப்பாளர் சுர்ஜேவாலா, அனைவரும் கூறிய கருத்துகளை அறிக்கையாக தயாரித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரிடம் கொடுத்துச் சென்றார். எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும்படியும் அறிவுரை வழங்கினார்.இதையடுத்து, முதல்வரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து, ஆளுங்கட்சியின் 137 எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு தலா 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசு நேற்று உத்தரவிட்டது. சோள பொரி
இதில் 37.50 கோடி ரூபாயை சாலைகள், பாலங்கள், கிராமப்புற சாலைகள், நகர்ப்புறப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும்; மீதம் 12.50 கோடி ரூபாயை எம்.எல்.ஏ.,க்கள் விரும்பும் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.நிதி ஒதுக்கிய பின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு சித்தராமையா எழுதிய கடிதத்தில், 'வரும் 30, 31ம் தேதிகளில் விதான் சவுதாவில் மூன்றாவது மாடியில் உள்ள அறை எண் 313ல் மாவட்டவாரியாக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு வரும் எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கனவே நிலுவையில் உள்ள பணிகள், புதிதாக துவங்க வேண்டிய பணிகள் பற்றிய, தகவலுடன் வர வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளார்.'யானை பசிக்கு சோள பொரி' என்பது போல, பல கோடி ரூபாய் எதிர்பார்த்திருந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, தலா 50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது. ஆனாலும் இந்த நிதி ஒதுக்கி இருப்பதன் மூலம், எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி கொஞ்சமாவது குறையும் என்று, சித்தராமையா நம்புகிறார்.இதற்கிடையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கி, எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு அரசு ஒரு ரூபாய் கூட சித்தராமையா ஒதுக்கவில்லை. இதனால் பா.ஜ., தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பதாக, சித்தராமையாவுக்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிக்கு மட்டும் தான் சித்தராமையா முதல்வரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.