சாகும் வரை முதல்வர் பதவி கிடைப்பது இல்லை காங்., மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தத்துவம்
பாகல்கோட்: ''அரசியலில் பதவியை விரும்புவது சகஜம். சிலருக்கு சாகும் வரை முதல்வர் பதவி கிடைப்பதில்லை,'' என, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி: அரசியலில் பதவிக்கு ஆசைப்படுவது சகஜமான விஷயம். சிலருக்கு சாகும் வரை முதல்வர் பதவி கிடைப்பது இல்லை. எனவே பதவியை விரும்பும் விஷயத்தில், சிறப்பு ஏதும் இல்லை. அதிகாரத்துக்காக போட்டி போடுவதும் நடக்கும். ஆனால் குறுக்கு வழியில் பதவியில் அமர முயற்சிக்க கூடாது. இப்போது சித்தராமையா, 'நானே ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்துவேன்' என்கிறார். ஆசைப்படுவதில் தவறேதும் இல்லை. துணை முதல்வராக இருப்பவருக்கு, முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சில நேரங்களில், துணை முதல்வராகவே இருந்து ஓய்வு பெறுகின்றனர். எனவே தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என, கவலைப்பட வேண்டாம். எத்தனை ஆண்டுகள் முதல்வராக இருப்போம் என்பது முக்கியம் அல்ல. முதல்வராக இருந்தவருக்கு, முதல்வராக நீடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 1979 முதல் 1995 வரை, கட்சியை நானே பலப்படுத்தினேன். ஆனால் எனக்கு பதிலாக குண்டுராவ் முதல்வரானார். இவரை தொடர்ந்து பங்காரப்பா முதல்வராக இருந்தார். அதற்கு முன்னதாக வீரேந்திர பாட்டீல் முதல்வராக இருந்தார். அப்போது, எனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என, நான் கவலைப்படவில்லை. தகுதி இருந்தால் முதல்வராவோம். 1980ல் நான் முதல்வராகி இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்பதவிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன். என்னால் தான் கட்சி ஆட்சிக்கு வந்தது என, கூற முடியாது. பசியில் இருந்து நாட்டு மக்களை மீட்க வேண்டும். இதற்கு வாக்குறுதி திட்டங்கள் உதவுகின்றன. இத்திட்டங்களை பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர். மற்ற மாநிலங்களில் இதே திட்டங்களை செயல்படுத்துகின்றனர். வாக்குறுதி திட்டங்களால், மாநிலத்தில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி பற்றாக்குறை இல்லை. நான் நிதி அமைச்சராக பணியாற்றியவன். சரியாக ஆட்சி நடத்தினால், லஞ்சம் நின்றால் அனைத்துக்கும் பணம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.