பெங்., ரூரல் தொகுதியிலும் ஓட்டு திருட்டு நடந்திருக்கலாம்? காங்கிரஸ் பிரசார குழு தலைவர் சந்தேகம்
பெங்களூரு: லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியிலும் ஓட்டுத் திருட்டு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக, காங்கிரஸ் பிரசார குழு தலைவர் வினய்குமார் சொரகே கூறியுள்ளார். ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி: லோக்சபா தேர்தலில் பெங்களூரு சென்ட்ரல் தொகுதிக்கு உட்பட்ட, மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் ஓட்டுத் திருட்டு நடந்தது போன்று, பெங்களூரு ரூரல் தொகுதியிலும் ஓட்டுத் திருட்டு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வாக்காளர் பட்டியலை சேகரிக்க, ஓட்டுச்சாவடி மட்டத்தில் இருந்து தகவல் சேகரித்து வருகிறோம். ஓட்டுத் திருட்டு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். பல தொகுதிகளில் ஆறு ஆண்டுகளாக, தேர்தல் அதிகாரிகள் ஒரே இடத்தில் பணி செய்கின்றனர். அவர்களை பயன்படுத்தி பா.ஜ., ஓட்டுகளை திருடி இருக்கலாம். தர்மஸ்தலா வழக்கு குறித்து எஸ்.ஐ.டி., விசாரணை நடத்த, பா.ஜ., எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, பா.ஜ., தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கல்லடுக்கா பிரபாகர் பட் இடையிலான மோதலே காரணம். வீரேந்திர ஹெக்டேவுக்கு எதிராக குரல் கொடுக்கும் மகேஷ் திம்மரோடி, பிரபாகர் பட் அணியை சேர்ந்தவர். அவரை துாண்டிவிடுவது யார்? தர்மஸ்தலா வழக்கில் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் வேலையை பிரபாகர் பட் செய்கிறார். சந்தோஷ் கூறியதால் பா.ஜ., தலைவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். எஸ்.ஐ.டி., விசாரணையை வீரேந்திர ஹெக்டே வரவேற்றுள்ளார். விசாரணையில் உண்மை வெளிவரும். சவுஜன்யா கொலை பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது நடந்தது. இதற்கும் காங்கிரஸ் அரசு மீது பழி சொல்கின்றனர். சவுஜன்யா கொலையானபோது சதானந்த கவுடா முதல்வராகவும்; அசோக் உள்துறை அமைச்சராகவும் இருந்தனர். இருவருமே சவுஜன்யா குடும்பத்திற்கு நீதி வாங்கித் தர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.