மேலும் செய்திகள்
மலிவு விலை சிமென்ட் திட்டத்துக்கு மூடுவிழா?
08-Aug-2025
பெங்களூரு: கிருஷ்ணா மேலணை திட்டப்பணிகள் தொடர்பாக, நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் சிவகுமார் மற்றும் கலால் துறை அமைச்சர் திம்மாபூர் இடையே மோதல் ஏற்பட்டது. விவசாயி களுக்கு வழங்கும் இழப்பீடு தொகை தொடர்பாக, இருவரும் காரசாரமாக விவாதம் நடத்தினர். கர்நாடகாவின் வட மாவட்டங்களான பாகல்கோட், விஜயபுரா, யாத்கிர், கலபுரகி, ராய்ச்சூர், கொப்பால், கதக் மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கில், 1964ல் கிருஷ்ணா மேலணை திட்டம் துவக்கப்பட்டது. திட்டம் முடிந்தால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்துக்கு, நீர்ப்பாசன வசதி கிடைக்கும். கட்டம், கட்டமாக பணிகள் நடக்கின்றன. முதலாவது, இரண்டாவது கட்ட திட்டப் பணிகளுக்கு, 11,060 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட திட்டப் பணிகளால், விஜயபுரா, பாகல்கோட், கலபுரகி, ராய்ச்சூர் மாவட்டங்களின் 176 கிராமங்கள் நீரில் மூழ்கின. தற்போது மூன்றாம் கட்ட பணிகளை துவக்க, நீர்ப்பாசனத்துறை தயாராகி வருகிறது. ஆலோசனை முதலாவது, இரண்டாவது கட்ட பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு, இழப்பீடு தொகை மிகவும் குறைவு என, விவசாயிகள் சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. கிருஷ்ணா மேலணை திட்டத்தின், மூன்றாம் கட்ட பணிகளை செயல்படுத்துவது, திட்டத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கு வது மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக, நீர்ப்பாசனத் துறை அமைச்சரான துணை முதல்வர் சிவகுமார் பெங்களூரின், விதான் சவுதாவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், திட்டம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, போசராஜு, திம்மாபூர், சரண பசப்பா தர்சனாபூர், சுதாகர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் திம்மாபூர், ''திட்டத்துக்கு நிலத்தை விட்டுத்தரும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 40 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார். இதனால் கோபமடைந்த துணை முதல்வர் சிவகுமார், ''மிஸ்டர் மினிஸ்டர், அமைச்சராக இருந்து கொண்டு, இதுபோன்று பேசுவது சரியல்ல. இதற்கு முன் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த, அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை, இழப்பீடு தொகையை நிர்ணயித்துள்ளார். ''இப்போது அமைச்சராக உள்ள உங்களுக்கு மதிப்பு கிடைக்க வேண்டும் என்பதால், இழப்பீடு தொகையை ஓரளவு அதிகரிக்கலாம். நீங்கள் கூறுவது போன்று, 40 முதல் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க முடியாது,'' என்றார். இதனால் அதிருப்தி அடைந்த திம்மாபூர், ''மக்களின் கருத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவது, என் கடமை. அந்த வேலையை நான் செய்துள்ளேன். உங்களின் அனுபவம் மற்றும் அதிகாரத்தின் அடிப்படையில், முடிவு எடுத்து கொள்ளுங்கள்,'' என்றார். துணை முதல்வர் சிவகுமார், ''எம்.எல்.ஏ.,க்கள், விவசாய தலைவர்கள் பேசட்டும். இந்த கூட்டத்தில் அமைச்சராக நீங்கள் இது போன்று பேசக்கூடாது,'' என்றார். ஆலோசனை கூட்டம் நடந்த இடத்தில், ஊடகத்தினரும் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் துணை முதல்வரும், அமைச்சரும் காரசாரமாக விவாதித்து கொண்டனர். ஊடகத்தினர் இதை கவனித்த அமைச்சர் பிரியங்க் கார்கே, ஊடகங்களின் கேமரா மேன்களை வெளியே அனுப்ப முயற்சித்தார். ஆனால், இதை சிவகுமார் தடுத்தார். 'ஊடகத்தினர் இருக்கட்டும்' என, கூறிவிட்டு மற்ற அமைச்சர்களிடம் கருத்துகள் கேட்டார். கூட்டம் தொடர்ந்து நடந்தது. கிருஷ்ணா மேலணை திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளின் செலவு ஏறுமுகமாக உள்ளது. திட்டத்தை விரைந்து முடிப்பதாக, ஒவ்வொரு அரசுகளும் உறுதி அளிக்கின்றன. ஆனால், நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு அதிகரிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டு, திட்டத்தை முடிக்கும் நோக்கில், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார், நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், விவசாயிகளின் நிலத்துக்கு ஏக்கருக்கு, 40 முதல் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி வலியுறுத்தி, அமைச்சர் திம்மாபூர், சிவகுமாரின் கோபப் பார்வைக்கு ஆளானார்.
08-Aug-2025