பெங்களூரு மக்களுடன் நிற்கிறேன் துணை முதல்வர் சிவா சப்பைகட்டு
பெங்களூரு : 'பிராண்ட் பெங்களூரு' திட்டத்தின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பெங்களூரு மக்களுடன் நிற்கிறேன் என்று, துணை முதல்வர் சிவகுமார் சப்பைகட்டு கட்டி உள்ளார்.பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலையில் பள்ளம் விழுந்து உள்ளது. 'பிராண்ட் பெங்களூரு, பிராண்ட் பெங்களூரு' என்று சொல்லி, சொல்லி நகரில் ஒரு வேலை கூட செய்யவில்லை. இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா என்று, அரசுக்கு எதிராக மக்கள் திரும்பினர். குறிப்பாக பெங்களூரு நகர வளர்ச்சி அமைச்சரான சிவகுமார் மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.இந்நிலையில் சிவகுமார் 'எக்ஸ்' வலைதள பதிவு:பெங்களூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்ட, சேதத்தால் மிகவும் கவலை அடைந்து உள்ளேன். மாநகராட்சி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். தகவல்களை பெற மாநகராட்சி வார் ரூம் செல்வேன்.நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் புதியவை இல்லை. பல அரசுகளின் பல ஆண்டு புறக்கணிப்பால் இந்த பிரச்னையை எதிர்கொள்கிறோம். பிரச்னையை தற்காலிகமாக அல்ல, நிரந்தரமாக தீர்ப்பேன். பெங்களூரு மக்களே, நான் உங்களில் ஒருவன். உங்களுடன் நிற்கிறேன். பெங்களூரில் மழை பிரச்னையை முழுமையாக தீர்க்க உறுதி பூண்டு உள்ளேன்.இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.சிவகுமார் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆர்.ஆர்.நகர் பா.ஜ., பிரமுகர் முனிராஜ் கவுடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோவில் 'பிராண்ட் பெங்களூரு' என்ற வாசகம் இருக்கும் பதாகையை கையில் பிடித்து, சிவகுமார் வெள்ளத்தில் அலை சறுக்கில் வருவது போன்று உள்ளது.'பெங்களூரு மக்களே, அலைசறுக்கு விளையாட, இனி கடலோர மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் அரசு தனது அன்புக்குரிய பாகிஸ்தான் கனவை நிறைவேற்ற, பெங்களூரை துறைமுகமாக மாற்றி உள்ளது' என்று பதிவிட்டு உள்ளார்.