- நமது நிருபர் -: உடுப்பி மாவட்டம், குந்தாபுரா தாலுகாவின் பசரூர் அருகில் உள்ள கந்தவாரா கிராமத்தில் 8 - 9ம் நுாற்றாண்டை சேர்ந்த உள்ளூரு ஸ்ரீ கார்த்திகேய சுப்பிரமண்ய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கந்தவாராவின் இயற்பெயர் ஸ்கந்தவரம் என்று நம்பப்படுகிறது. சமஸ்கிருதம், கன்னடத்தில், 'ஸ்கந்தவரம்' என்றால், ராணுவ முகாம் அல்லது பாசறையை குறிக்கிறது. * முனிவர்கள் தெய்வீக படைகளின் தளபதியாக கார்த்திகேயன் விளங்கியதால், தெய்வீக பாதுகாப்பு மற்றும் வெற்றிக்காக, அவருக்காக இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்தல புராணங்கள்படி, தாரகாசுரனை வதம் செய்த சுப்பிரமணியர், பல இடங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டு, முனிவர்கள், வீரர்கள், பக்தர்களை ஆசிர்வதித்து வந்தார். இந்த பயணத்தின் போது, தற்போதைய கந்தவாராவுக்கு அருகில் உள்ள காடுகள் நிறைந்த கடலோர பகுதிக்கு வந்தார். அங்கு உள்ளூர் மக்களின் பக்தியாலும், தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களாலும் மகிழ்ந்த சுப்பிரமணியர், அவர்களை காக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும், தன் இளமைக்கால வீரர் ரூபத்தில் இந்த புனித தலத்தில் தங்க தீர்மானித்தார். * சர்ப்ப தோஷம் சுப்பிரமணியரின் தெய்வீக சக்தி, நாக தெய்வங்களை இப்பகுதிக்கு ஈர்த்தது என்றும் நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே, கோவில் வளாகத்தை சுற்றிலும் பழமையான நாக கற்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. பல நுாற்றாண்டுகளாக இக்கோவில் நாக வழிபாட்டுக்கும், சர்ப்ப தோஷம் தொடர்பான பரிகாரங்களுக்கும் முக்கிய மையமாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு புக்கராயா, தேவராயா, மல்லிகார்ஜுன ராயா, விருபாக் ஷ ராயா, கிருஷ்ணதேவராயா ஆகிய மன்னர்கள் விவசாய நிலங்கள், எண்ணெய் விளக்குகளை நன்கொடையாக வழங்கியதுடன், வரி விலக்கும் அளித்துள்ளனர். இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட துளு மொழி கல்வெட்டு ஒன்றில், 1408ல் விஸ்வாமித்ர கோத்ர உதபா மற்றும் ஹெப்பார் குடும்பத்தினருக்கு குலதெய்வமாக விளங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கருவறையில், இளமைக்கால வீரர் ரூபத்தில், கையில் சக்திவாய்ந்த ஆயுதத்துடன் கார்த்திகேயன் அருள்பாலிக்கிறார். அவருக்கு பின் அவரின் வாகனமான மயில் உள்ளது. இந்த சிற்பம் சாளுக்கியர், பல்லவர் காலத்திய பாணியில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நாக தோஷம் நீங்கவும், குடும்ப நலம், குழந்தைப்பேறு வேண்டியும் பக்தர்கள் வந்து தரிசித்து பலன் அடைகின்றனர்.