உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சுரங்க சாலை திட்டத்தில் கடினமான நிபந்தனை 4 நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்பு

 சுரங்க சாலை திட்டத்தில் கடினமான நிபந்தனை 4 நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்பு

பெங்களூரு: பெங்களூரில் சுரங்க சாலை திட்டத்துக்கு அரசு கடும் நிபந்தனைகள் விதித்துள்ளதால், வெறும் நான்கு நிறுவனங்கள் மட்டுமே டெண்டர் கோரியுள்ளன. எனினும் இரண்டு நிறுவனங்களின் டெண்டர் நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பல தரப்பு எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், பெங்களூரில் சுரங்க சாலை அமைப்பதில், பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான சிவகுமார் உறுதியாக இருக்கிறார். இந்த திட்டத்தை செயல்படுத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, இந்த திட்டத்தை செயல்படுத்தும், 'பி - ஸ்மைல்' அதிகாரிகள் கூறியதாவது: சுரங்க சாலை திட்டத்துக்கு, அதானி குரூப், திலிப் பில்டுகான், விஸ்வ சமுத்ரா இன்ஜினியரிங், ரயில் விகாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளன. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், ஐந்து ஆண்டுகளில் கட்டிய மேம்பாலம், சாலை, சுரங்கம், மெட்ரோ ரயில் பாதைகள் இடிந்திருக்கக் கூடாது என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு நிறுவனங்களின் டெண்டர் நிராகரிக்கப்படலாம். திலிப் பில்டுகான் நிறுவனம், ஆந்திராவின், அங்கபள்ளியில் கட்டிய மேம்பாலம், 2021 ஜூலையில் இடிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்தனர். தரமின்றி மேம்பாலம் கட்டியதால், இந்த நிறுவனத்துக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 3 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது. அதானி குரூப் நிறுவனம், கேரளாவில் அமைத்திருந்த அளியூர் - வெங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்தது. இதுகுறித்து, ஆய்வு செய்த நெடுஞ்சாலை ஆணையம், இந்நிறுவனத்தை ஓராண்டு கறுப்பு பட்டியலில் சேர்க்கும்படி சிபாரிசு செய்திருந்தது. எனவே அதானி குரூப், திலிப் பில்டுகான் நிறுவனங்களின் டெண்டர் நிராகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், 'நிறுவனங்களின் மொத்த மதிப்பு, 2024 - 25ல், 2,192 கோடி ரூபாயாக இருந்தால் மட்டுமே, டெண்டரில் பங்கேற்க வேண்டும்' எனவும், கூறப்பட்டிருந்தது. ஆனால் இவ்விரு நிறுவனங்களின் மதிப்பு அவ்வளவு இல்லை. இதுவும் அவற்றின் டெண்டர் மறுக்கப்பட காரணமாக இருக்கலாம். சுரங்க திட்டத்துக்கு தேவையான, மொத்த தொகையில், 60 சதவீதத்தை டெண்டர் பெறும் நிறுவனங்களே ஏற்க வேண்டும். சுரங்க சாலை அமைக்கப்பட்ட பின், இதை பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தொகையை முதலீடு செய்வது கஷ்டம். இதே காரணத்தால், சுரங்க சாலை அமைத்து அனுபவம் வாய்ந்த எல் அண்ட் டி நிறுவனம், டாடா குரூப், அஷ்கான்ஸ், ஹெச்.சி.சி., நிறுவனங்கள், பெங்களூரில் சுரங்க சாலை அமைக்கும் திட்டத்துக்கு டெண்டர் அளிக்காமல் ஒதுங்கியுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ