உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிவகுமாரை மாற்றும்படி கேட்காதீர்கள் அமைச்சர்களிடம் கார்கே கறார்

சிவகுமாரை மாற்றும்படி கேட்காதீர்கள் அமைச்சர்களிடம் கார்கே கறார்

பெங்களூரு: 'கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, நவம்பர் மாதம் வரை சிவகுமாரை மாற்றும்படி கேட்காதீர்கள்' என்று, அமைச்சர்களிடம், மல்லிகார்ஜுன கார்கே கறாராக கூறி உள்ளார்.முதல்வர் பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையில் பனிப்போர் நிலவிய நிலையில், 'ஐந்து ஆண்டுகளும் நானே பதவியில் இருப்பேன்' என்று, சித்தராமையா அறிவித்து உள்ளார். ஆனாலும் சிவகுமார் அமைதியாக இருக்க மாட்டார் என்று, முதல்வருக்கு தெரிந்து உள்ளது. மாநில தலைவர் பதவியை கையில் வைத்திருப்பதால், அந்த பதவியை பயன்படுத்தி, அடுத்த தேர்தலில் சீட் வழங்க மாட்டேன் என்று மிரட்டி, தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை சிவகுமார் இழுத்து விடலாம் என்று, சித்தராமையாவுக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சிவகுமாரிடம் இருந்து தலைவர் பதவியை பறித்து, தனது ஆதரவாளர்களில் ஒருவருக்கு வழங்க முதல்வர் திட்டமிட்டு உள்ளார். இதற்காக தனது ஆதரவு அமைச்சர்களான ஈஸ்வர் கன்ட்ரே, சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோரை துாண்டி விட்டு உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை நேற்று முன்தினம் இரவு, சித்தராமையா அணி அமைச்சர்கள் ஈஸ்வர் கன்ட்ரே, மஹாதேவப்பா, ஜமீர் அகமதுகான் ஆகியோர் சந்தித்து பேசினர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், துணை முதல்வர் சிவகுமாரிடம் இருந்து, மாநில தலைவர் பதவியை பறிக்க வேண்டும். வேறு யாருக்காவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, 'சிவகுமாரை மாற்ற வேண்டும் என்று இருந்தால், லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரே செய்து இருக்க வேண்டும். விரைவில் பீஹாருக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் இங்கு ஏதாவது மாற்றம் நடந்தால், அது பீஹாரில் எதிரொலிக்கலாம். வரும் நவம்பர் மாதம் வரை, தலைவர் பதவியில் இருந்து சிவகுமாரை மாற்ற வேண்டும் என்று கேட்டு, என்னிடம் யாரும் வர வேண்டாம்' என்று கறாராக சொல்லி அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை