வீட்டு வாசலுக்கு வரும் நடமாடும் காவிரி திட்டம் துவக்கம்! தனியார் டேங்கர்களை கட்டுப்படுத்த வாரியம் அதிரடி
கோடைக்காலம் வந்தால், தனியார் டேங்கர் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம். பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமாக இருக்கும். குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில், பிரச்னை அதிகம். குடிநீருக்கும், மற்ற தேவைகளுக்கும் தனியார் டேங்கர்களை நம்ப வேண்டி இருக்கும். சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தும் தனியார் டேங்கர் உரிமையாளர்கள், மனம் போனபடி கட்டணம் வசூலிக்கின்றனர். மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகின்றனர். இதை தவிர்க்கும் நோக்கில், மக்களின் வீட்டு வாசலுக்கே குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யும்படி, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு குடிநீர் வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதன்படி, 'நடமாடும் காவிரி' திட்ட பணிகளை, குடிநீர் வாரியம் துவக்கியது. குடிநீர் தேவைப்படுவோர், 'ஆன்லைன்' வழியாக ஆர்டர் செய்து, குடிநீர் பெறலாம்.'நடமாடும் காவிரி' திட்டத்தை செயல்படுத்தி, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் அளித்த பேட்டி:தனியார் டேங்கர் உரிமையாளர்கள், பொது மக்களிடம் குடிநீருக்காக அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதை தவிர்க்கும் நோக்கில், மக்களின் வீட்டு வாசலுக்கே குடிநீர் கொண்டு சேர்க்க, 'நடமாடும் காவிரி' எனும், 'காவிரி வாட்டர் ஆன் வீல்ஸ்' திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தின் கீழ், குடிநீர் வாரியத்தில் வாடகை அடிப்படையில், டேங்கர் வினியோகிக்க விரும்பும் உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் வாரியத்தில் பதிவு செய்து கொண்ட டேங்கர்கள், பெங்களூரு மாநகராட்சியின் 110 கிராமங்கள் உட்பட, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யலாம்.குடிநீர் தேவைப்படும் பொது மக்கள், ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யலாம். அவர்களின் வீடுகளுக்கே டேங்கர் மூலம் சுத்தமான காவிரி நீர் வினியோகிக்கப்படும்.திட்டத்தை துவக்குவதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே செயலி மற்றும் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் சிவகுமார் ஆன்லைன் சேவையை துவக்கி வைப்பார்.வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி, டேங்கர் புக் செய்து கொள்ளலாம். இது சிறப்பான திட்டமாகும். நாட்டின் எந்த குடிநீர் வாரியமும், இத்தகைய திட்டத்தை செயல்படுத்தியதில்லை. பெங்களூரின் பல பகுதிகளில், தனியார் டேங்கர்கள் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக, புகார் வந்துள்ளது. பெங்களூரு குடிநீர் வாரியத்தில், போதுமான தண்ணீர் இருப்புள்ளது. 110 கிராமங்களுக்கும், மற்ற பகுதிகளுக்கும் சுத்தமான குடிநீர் வினியோகிப்பது, எங்களின் குறிக்கோளாகும். குடிநீர் வினியோகிக்க தனியார் உரிமையாளர்கள், வாடகை அடிப்படையில் டேங்கர் வழங்கலாம்.குடிநீர் வாரியத்தில் டேங்கர் பதிவு துவங்கப்பட்டுள்ளது. https://bwssb.karnataka.gov.in/ வலைதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக கூடுதல் தகவல் வேண்டுவோர், குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் சனத் குமாரை 99018 88830 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். டேங்கர்களை பதிவு செய்து கொள்ள, ஏப்ரல் 10 வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.