கார் மீது மழை நீர் தெறித்த தகராறு ஓட்டுநர் கை விரலை கடித்து குதறியவர்
பெங்களூரு: கார் மீது மழை நீர் தெறித்து விட்டார் என்பதால், அந்த கார் உரிமையாளரை, மற்றொரு கார் ஓட்டுநர், முகத்தில் குத்தி, கை விரல்களை கடித்து குதறினார். விரல்கள் துண்டாகி, அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது.பெங்களூரின் மெஜஸ்டிக் அருகில் வசிப்பவர் ஜெயந்த், 35. இவர் கடந்த 25ம் தேதி, தன் மனைவியுடன் லுலு ஷாப்பிங் மாலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சில நாட்களாக பெங்களூரில் மழை பெய்வதால், ஓக்லிபுரம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது.இந்த சுரங்கப்பாதையில், ஜெயந்த் காரை ஓட்டி செல்லும் போது, தண்ணீர், பக்கத்தில் சென்ற மற்றொரு கார் மீது தெறித்தது. இதனால் கோபமடைந்த அந்த கார் ஓட்டுநர், ஜெயந்தை வழி மறித்து தகாத வார்த்தைகளால் திட்டினார். இவரும் கார் மீது தண்ணீர் தெறித்ததற்கு, மன்னிப்பு கேட்டு விட்டு பயணத்தை தொடர்ந்தார்.அப்போதும் சமாதானம் அடையாத கார் ஓட்டுநர், லுலு மால் வரை பின் தொடர்ந்தார். ஜெயந்தின் காரை வழிமறித்து, அவரை கீழே இழுத்து தாக்கி, முகத்தில் ஓங்கி குத்தினார். அவரது வலது கை விரலை கடித்து குதறிவிட்டு, அங்கிருந்து சென்றார்.இதில் ஜெயந்தின் விரல்கள் கிழிந்து, ரத்தம் கொட்டியது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது கை விரல்களில் ஆறு தையல் போடப்பட்டது. ஆறு மாதங்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர் அறிவுறுத்தினார். சிகிச்சைக்காக, 2 லட்சம் ரூபாய் செலவானது.சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஜெயந்த், நடந்த சம்பவத்தை விவரித்து, மாகடி சாலை போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அந்த கார் ஓட்டுநரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.