பெலகாவி: அமெரிக்க நபர்களை குறிவைத்து, 'ஆன்லைன் டிரேடிங்' பெயரில் மோசடி செய்த, போலியான 'கால்சென்டர்' பெலகாவியில் கண்டுபிடிக்கப்பட்டது. 33 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து, பெலகாவி நகர் போலீஸ் கமிஷனர் பூஷண் போரசே கூறியதாவது: பெலகாவியில் போலியான கால்சென்டர் இயங்குவதாக, பெங்களூரின் உள்நாட்டு பாதுகாப்பு துறை, பெலகாவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. பொது மக்களும் புகார் அளித்திருந்தனர். இதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெலகாவி பேக்சைட் சாலையில் உள்ள 'குமார் ஹால்' என்ற கால்சென்டரில் சோதனை நடத்தப்பட்டது, இந்த கால்சென்டர் போலியானது. அமெரிக்க நபர்களை குறிவைத்து, ஆன்லைன் டிரேடிங் பெயரில் மோசடி செய்து, பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்தி, மோசடியில் ஈடுபட்ட 28 ஆண்கள், ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 37 லேப்டாப்கள், 37 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் கால்சென்டரில் இருந்து, அமெரிக்க நபர்களை தொடர்பு கொண்டு, 'நீங்கள் ஆன்லைனில் கிப்ட் கார்டுகள், பொருட்களை வாங்கியுள்ளீர்கள்; அதற்கான பணம் செலுத்துங்கள்' என கேட்பர். அமெரிக்கர்கள், தாங்கள் எந்த பொருட்களும் வாங்கவில்லை என, கூறினாலும் 'நீங்கள் ஆர்டரை கேன்சல் செய்ய வேண்டுமானால், குறிப்பிட்ட தொகையை அபராதம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் உங்கள் கணக்கில் இருந்து, நேரடியாக பணம் பரிமாற்றம் செய்து கொள்வோம்' என, மிரட்டி பணம் பெற்றுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களை ஆய்வு செய்தபோது, சிறப்பு சாப்ட்வேர் பயன்படுத்தி, அமெரிக்காவின் பலருக்கு அழைப்பு விடுத்தது தெரிந்தது. உண்மையான லொகேஷன் தகவலை மூடி மறைத்து, போலியான லொகேஷன் காட்டும் சாப்ட்வேர் பயன்படுத்தியுள்ளனர். கால்சென்டரின் ஒவ்வொரு ஊழியரும், தினம் 100 பேருக்கு போன் செய்துள்ளனர். இந்த குழுவினர் எத்தனை பேரை மோசடி செய்தனர்; எவ்வளவு பணம் பறித்துள்ளனர் என்பது குறித்து, தீவிரமாக விசாரிக்க வேண்டும். கைதானவர்களில் அசாம், குஜராத், ஹிமாசல பிரதேசம், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். மோசடியின் முக்கியமான குற்றவாளி குஜராத்திலும், இருவர் மேற்கு வங்கத்திலும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருகிறோம். நடப்பாண்டு மார்ச் மாதம் முதல், அந்த கால்சென்டர் செயல்பட்டு வந்தது. இதன் செயல்பாடுகளை விஸ்தரிக்கவும் திட்டமிட்டிருந்தனர். அதற்குள் அவர்களை கண்டுபிடித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.