| ADDED : நவ 22, 2025 05:13 AM
கலபுரகி: பக்கத்து நிலத்து உரிமையாளரை சிறைக்கு அனுப்ப, தன் மகளையே கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கலபுரகி நகரின் கல்லஹங்கரகா கிராமத்தில் வசிப்பவர் குன்டேராவ் நிலுாரா, 55. இவரது மகள் மஞ்சுளா, 17; மாற்றுத்திறனாளி. குன்டேராவ் நிலுாராவுக்கும், இவரது பக்கத்து நிலத்தின் உரிமையாளருக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. பல முறை கைகலப்பும் நடந்துள்ளது. நிலத்தகராறு குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தனக்கு தொல்லை கொடுக்கும் பக்கத்து நிலத்து உரிமையாளரை, சிறைக்கு அனுப்ப வேண்டும் என, குன்டேராவ் நிலுாரா, சதி திட்டம் தீட்டினார். இதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு, தன் மாற்றுத்திறனாளி மகள் மஞ்சுளாவை, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, துாக்கில் தொங்கவிட்டார். அவரது கையில் ஒரு கடிதம் எழுதி வைத்தார். அந்த கடிதத்தில் 'பக்கத்து நில உரிமையாளரின் தொந்தரவை தாங்க முடியவில்லை. அவரால் தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' என எழுதப்பட்டிருந்தது. பக்கத்து நில உரிமையாளரின் தொல்லையால், தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக, குன்டேராவ் அழுது நாடகமாடினார். கலபுரகி ஊரக போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு, பெண்ணின் தந்தை குன்டேராவ் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிரமாக விசாரித்ததில், உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. மஞ்சுளா தற்கொலை செய்யவில்லை; கொலை செய்யப்பட்டது தெரிந்தது. பக்கத்து நிலத்துக்காரரை பழிவாங்க, தன் மகளை கொலை செய்ததை தந்தை ஒப்புக்கொண்டார். அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம், கிராமத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதிரியை பழிவாங்க சொந்த மகளை கொன்றவருக்கு, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என, போலீசாரிடம் வலியுறுத்தினர்.