வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ரூ.2.53 லட்சம் அபராதம் வசூல்
தட்சிண கன்னடா : பெங்களூரில் பல வாகனங்களில் உள்ள கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இந்த ஸ்டிக்கர்களால், வாகனத்திற்குள் இருப்பவர்களை வெளியே இருப்பவர்களால் பார்க்க முடியாது.இத்தகைய வாகனங்களில் குற்ற சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வந்தன. இதனால், அதிக அடர்த்தியான கருப்பு நிற ஸ்டிரிக்கர்களை ஒட்டுவதை தடை செய்து உச்ச நீதிமன்றம் 2012ல் உத்தரவிட்டிருந்தது.இந்த தீர்ப்பை மீறி, இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் கார், வேன்களில் அடர்த்தியான கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன. இதே போன்று தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள வாகனங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன.இதை கருத்தில் கொண்ட மாவட்ட போக்குவரத்து போலீசார், நேற்று முன்தினம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பத்து போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் சிறப்பு சோதனையை மேற்கொண்டனர்.இதுகுறித்து நேற்று போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:பத்து போக்குவரத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையில், கார், வேன், மினி வேன் உள்ளிட்ட வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில், அடர்த்தியான கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய 504 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.அவர்களிடமிருந்து, 2.53 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. வாகன உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.மேலும், வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு நிற ஸ்டிக்கர்களை போலீசார் அகற்றினர். இவை அனைத்தும் மோட்டார் வாகன சட்டத்தின் படியே நடந்து உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் வரும் நாட்களில் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.