வணிக வளாகங்களில் பாதுகாப்பு தீயணைப்பு துறைக்கு உத்தரவு
பெங்களூரு : ''வணிக வளாகங்களில் தீ தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ள, பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யுங்கள்,'' என்று தீயணைப்பு துறைக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட்டு உள்ளார்.பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:ஹைதராபாதில் அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள நகைக்கடையில் ஏற்பட்ட தீ மற்ற கட்டடங்களுக்கு பரவி, குழந்தைகள் உட்பட 17 பேர் இறந்தது துரதிர்ஷ்டவசமானது.இதை ஒரு உதாரணமாக எடுத்து கொண்டு, கர்நாடகாவில் உள்ள வணிக வளாகங்களில் தீ தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய தீயணைப்பு துறைக்கு உத்தரவிட்டு உள்ளேன்.மாநிலத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களை திருப்பி அனுப்பும் பணி நடந்து வருகிறது. பெங்களூரில் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்புகளை தடுக்க மாநகராட்சி முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிப்பது சகஜம்.வாரியங்களுக்கு தலைவர் நியமிப்பது தொடர்பான பட்டியலை சமர்பித்து உள்ளேன். துமகூரு வரை மெட்ரோ சேவை நீட்டிப்பது பெங்களூரு மீதான அழுத்தத்தை குறைக்கும். இரு மாவட்ட மக்களும் பயன் பெறுவர்.இந்த யோசனை முட்டாள்தனமானது என்று எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறி உள்ளார். அவருக்கு சரியான புரிதல் இல்லை. துமகூரு எம்.பி.,யான மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவும் பெங்களூரை சேர்ந்தவர். துமகூருக்கு மெட்ரோ தேவை என்பதை அவர் அறிந்து வைத்து உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.